மாலைதீவு அரச வழக்கறிஞர் தாக்குதல் சம்பவம்: தொடரும் பதற்றம்

மாலைதீவு அரசு வழக்கறிஞரான ஹுசைன் ஷமீமை அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் குத்திய சம்பவத்தினால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலைதீவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடந்து வரும் நிலையில் மாலைதீவு அரசால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞரை பட்டப்பகலில் கத்தியால் குத்திய சம்பவமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாலைதீவில் தற்போது முகமது முய்ஸு அதிபராக இருந்து வருகிறார், சீன ஆதரவு நிலைப்பாட்டை கொண்டிருக்கும் அவரது ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நிலை மோசமடைந்துள்ளதை எடுத்துக்காட்டும் வகையில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக பலதரப்பட்டோரும் தெரிவித்து வருகின்றனர்.

ஷமீம் மீதான குறித்த கத்திக்குத்துத் தாக்குதல், சட்ட மற்றும் அரசாங்கத் துறைகளில் முக்கியப் பிரமுகர்கள் எதிர்கொள்ளும் சவால்களை சுட்டிக்காட்டுகிறது.

இந்தச் சம்பவமானது மாலைதீவின் ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலையையும் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

வழக்கறிஞர் மீதான கத்திக்குத்துச் சம்பவம் தொடர்பான விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்படாமல் இருந்தாலும், பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.

மேலும் மாலைதீவில் தீவிரவாதம் மற்றும் சட்ட ஒழுங்கு நிலை மோசடமடைந்து வருவதாக கவலை அதிகரித்து வரும் நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

முகமது முய்ஸு சீன ஆதரவு போக்கை வலியுறுத்தி இந்தியாவிற்கு எதிரான பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு சொந்த நாட்டிலேயே தனக்கு எதிர்ப்பை சம்பாதித்து வருகிறார்.

தனது பதவியை இழக்கும் இக்கட்டான சூழலில் மாலைதீவு அதிபர் உள்ள நிலையில் இவ்வாறான சம்பவங்கள் அவருக்கான எதிர்ப்புகளிற்கு மேலும் வழுச் சேர்க்கின்றமை குறிப்பிடத்தக்கது.