13ஐ நடைமுறைப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு: யாழில் மைத்திரி தெரிவிப்பு

இலங்கை அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 13ஆம் திருத்தத்தினை நடைமுறைப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (30.06.2023) யாழ். பொது நூலகத்தைப் பார்வையிட்ட பின் ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோது, ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பதின்மூன்றாவது திருத்தத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும் எனத் தமிழ் கட்சிகள் கோரிக்கை முன்வைக்கின்ற நிலையில் அது அரசியல் அமைப்பில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று.

அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 13ஐ நடைமுறைப்படுத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

ஆகவே நாங்கள் அரசாங்கத்தில் இல்லாவிட்டாலும் 13ஐ நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவு வழங்குவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், யாழ். பொது நூலகத்திற்கு விஜயம் செய்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நூலகத்தின் பல பகுதிகளைப் பார்வையிட்டதுடன் அங்குக் கூடியிருந்த பணியாளர்களுடன் சினேகபூர்வமாகக் கலந்துரையாடியுள்ளார்.

குறித்த நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் சயின் வாஸ் குணவர்தன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துஷ்மந்த சமீர, முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் தகாம் சிறிசேனா, அங்கஜன் இராமநாதனின் பிரத்தியேக செயலாளர் சிவராம் ஆகியோர் உடன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.