ரணிலுடன் பேச்சுவார்த்தை - முன்வைக்கப்படும் முக்கிய கோரிக்கை!


சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்புக்கள் இன்றையதினம் இடம்பெறவுள்ளது.

இந்தநிலையில், சிறிலங்காவின் அதிபர் ரணிலுடன் பேச்சுவார்த்தைக்கு செல்ல தயாராகும் தமிழ் கட்சிகளுக்கு சில முக்கிய வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த வேண்டுகோளினை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் முன்வைத்துள்ளது.

2009 இல் யுத்தம் மெளனிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கையளிக்கப்பட்ட, சரணடைந்த, கூட்டிச் செல்லப்பட்ட உறவுகளும், வெள்ளை வேன்களிலும், ஆயுத முனைகளிலும் கடத்தப்பட்ட உறவுகளும், சிங்கள அரசாலும், அதன் இராணுவ துணைக்குழுக்களாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர்.

அவர்களை தேடி 14 வருடங்களாக உறவுகளாகிய நாங்கள் போராடி வருகின்றோம். அதில் எட்டு வருடங்கள் எமது அரசியல் கைதிகளை நம்பி இருந்த காலம்.

அக்காலத்தில் எமது சில தமிழ் அரசியல் தரப்பினரின் ஆதரவுபெற்ற, அவர்களால் நல்லாட்சி என புகழப்பட்ட அரசு இருந்தது.

அப்போதும் கூட எமது அரசியல்வாதிகளால் எமது உறவுகளை மீட்டுத்தர, நீதி பெற்றுத்தர முடியாமல் போய்விட்டது. 2017.02.20 இல் எமது தொடர் போராட்டம் தொடங்கியது.

மைத்திரியுடன் நடைபெற்ற மூன்று சந்திப்புக்களிலும், அவர் எம்மிடம் தந்த வாக்குறுதிகளை மீறியதால் இலங்கை அரசிடம் நீதியை பெற முடியாது என அறிவித்து, சர்வதேசத்தை நோக்கி எமது போராட்டத்தை நடத்தி வருகிறோம்.

இலங்கை அரசு அனுசரணை வழங்கிய 40/1 தீர்மானத்திற்கு எவ்வித முன்னேற்றமும் இன்றி காலத்தை இழுத்தடித்த போதும், இலங்கை அரசுக்கு மேலும் காலநீடிப்பு வழங்கும்படி எமது தமிழ் அரசியல்வாதிகள் சர்வதேச நாடுகளில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்கள்.

நாம் கால நீடிப்புக்கு ஆதரவு வழங்க வேண்டாம் எனக் கேட்டிருந்தோம். அதையும் மீறி காலா நீடிப்புக்கு செயல்படுத்த முடிவெடுத்த எமது அரசியல்வாதிகள், எமது துயரத்தையும், வலியையும், இழப்பையும் பொருட்படுத்தவே இல்லை.

மீண்டும் இப்போது சர்வதேசத்திற்கு காட்டுவதற்காக சிறிலங்ககா அரசினால் ஆடப்படும் பேச்சுவார்த்தை எனும் நாடகத்தில் பங்கேற்க இருக்கும் அரசியல்வாதிகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயம் தொடர்பாகவும் கதைக்கவுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டோம்.

உள்ளூர் பொறிமுறையில் நம்பிக்கை இழந்து சர்வதேச நீதி ஒன்றே எமக்கு தீர்வை பெற்றுத்தரும் என தெளிவான முடிவுடன் போராடும் எமது வலிகளை மீண்டும் உங்களின் சுயலாப அரசியலுக்காக சிறிலங்கா அரசிடம் அடகு வைக்காதீர்கள்.

உங்கள் நலனுக்காக எமது கண்ணீர்களுக்கு சிங்கள அரசிடம் நீங்கள் விலை போகாதீர்கள்.

உண்மையில் நீங்கள் இதய சுத்தியுடன் தமிழ் மக்களின் நலன் கருதியே பேச்சுவார்த்தைக்கு செல்வதாக இருந்தால் முதலில்,

"எமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டதற்கு காரணமான சிங்கள இராணுவத்தை எமது தாயகமான வடக்கு கிழக்கில் இருந்து வெளியேருவதற்கு சிறிலங்கா அரசை இணங்கச் செய்யுங்கள்.

எமது உறவுகள் தொடர்பான சர்வதேச விசாரணைகளில் சிறிலங்கா அரசின் ததலயீடு / அச்சுறுத்தல்கள் இருக்காது என்ற உறுதிப்பாட்டினை பெறுதல்.

எமது தாயகமான வடக்கு கிழக்கில் திட்டமிட்ட சிங்கள, பெளத்த மயமாக்களை நிறுத்துவதற்கான உறுதிப்பாட்டினை பெறுதல்." போன்ற கோரிக்கைகளை வடக்கு, கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் முன்வைத்துள்ளது.