மகிந்த விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை விரும்பவில்லை - உண்மையை வெளிப்படுத்திய மகிந்தவின் முக்கிய சகா!


முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை விரும்பவில்லை, வன்னிக்கு சென்று விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவே விரும்பினார் என புதிய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், 2005ம் ஆண்டு அதிபர் தேர்தலில் வெற்றிபெற முடியாத நிலையிலே மகிந்த இருந்தார், அப்போது ஜாதிக ஹெல உறுமயவில் இருந்த நாங்கள் கடுமையாக பாடுபட்டு வெற்றிபெற செய்தோம் என தெரிவித்துள்ளார்.

வெற்றி பெற முடியாத நிலையில் இருந்த மகிந்த ராஜபக்சவை அதிபர் தேர்தலில் வெற்றிபெற வைத்ததுடன், தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை தவிர்த்து பேச்சுவார்த்தையில் ஈடுபட விரும்பியவரை யுத்தத்தில் தள்ளி வெற்றிபெற செய்ததும் நாங்களே என புதிய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் பின்னர் மக்கள் மத்தியில் ஆதரவை பெற்று மீண்டும் அவர் அதிபராக வருவதற்கு காரணமாக இருந்தது நாமே என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் பின்னால் இருந்து நாங்கள் வெற்றி பெறவில்லை எங்களால் தான் மகிந்த வெற்றிபெற்றார் என உதய கம்மன்பில தனது செவ்வியில் கூறியுள்ளார்.