மாவீரர் தினம் வெளிப்படுத்திய செய்தி

ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் தினம் அறிவிக்கும் செய்தி என்பது ஈழத் தமிழ் மக்களின் மனக்குமுறல்களாக மாத்திரமின்றி, ஈழ மண்ணின் தாகமுமாய், ஈழம் இருக்கும் சூழலின் குரலாகவும் முக்கியத்துவம் பெறுகின்றது.

அந்த வகையில் இம்முறை மாவீரர் தினம் என்ன செய்தியை வெளிப்படுத்தியுள்ளது? வழக்கமாக 2009இற்கு முந்தைய காலத்தில் தலைவர் பிரபாகரன் அவர்களின் மாவீரர் தின உரை மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருந்தது. சிறிலங்கா அரசு மாத்திரமின்றி உலகமும் அந்த உரையை கவனித்து வந்தது.

2009இற்குப் பிறந்தைய சூழலில் தலைவர் பிரபாகரனின் மாவீரர் தின உரை இடம்பெறாது விட்டாலும்கூட தமிழ் ஈழ மக்கள் மாவீரர் தினம் வாயிலாக பெரும் செய்தியை அறிவித்து வருகின்றனர்.

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு விளக்கேற்ற செல்லுமொரு பயணம், இருவேறு காலங்களை நினைவில் புரட்டுகிறது. 2009இற்கு முந்தைய காலத்தில் அன்றைய தமிழீழத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு கிளிநொச்சி டிப்போ சந்தியில் இருந்து மாவீரர் துயிலும் இல்லம் நோக்கி ஒரு பள்ளி மாணவனாக சீருடையுடன் தொண்டு புரியச் சென்ற காலங்கள் நினைவில் திரள்கிறது.

2009இற்கு முன்னர் கண்டதொரு காட்சி. போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 15 ஆண்டுகளை அண்மிக்கும் இன்றைய நாட்களில் இடம்பெறும் மாவீரர் நாளிலும் அதே காட்சியைக் காண முடிகிறது. அக் காட்சி இன்றைய ஈழத்தின் குரலாக, ஈழத்தின் செய்தியாக மிக முக்கியம் பெறுகிறது.

மாவீரர் தினமன்று, மாலை மூன்று மணி கடக்கத் துவங்க, மக்கள் மெல்ல மெல்ல துயிலும் இல்லங்களை நோக்கித் திரள்வார்கள். அதற்கு யாரும் அழைப்பு விடுவதில்லை. மக்கள் தன்னெழுச்சியாக துயிலும் இல்லத்திற்கு திரள வீதிகள் நெரிசலாகும்.

இன்றைய சூழலில், ஒரு பக்கம் இராணுவம். துப்பாக்கிளை ஏந்தியபடி கண்காணித்துக் கொண்டிருக்க, காவல்துறையினரும் அவதானித்தபடியிருக்க, மக்கள் துயிலும் இல்லத்தை நோக்கி திரண்டமையை கடந்த நவம்பர் 27அன்று கண்டோம்.

தமிழர் தாயகத்தின் துயிலும் இல்லங்கள் பலவற்றில் அரசின் அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்ட நிலையிலும் மக்கள் இவ்வாறு திரண்டார்கள் என்பது சொல்லுகிற செய்தி வலியதல்லவா?

2015இல் ரணில் பிரதமராக ஆட்சிக்கு வந்தவேளையில் அமைச்சரவைப் பேச்சளராக இருந்தார் ராஜித சேனாரத்தின. மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு எத்தனை பேர் வாறார்கள் என்பதை பார்க்கிறோம் என்றும் மக்கள் துயிலும் இல்லங்களுக்கு வரமாட்டார்கள் என்றும் கூறினார் ராஜித. 2016ஆம் ஆண்டு மாவீரர் நாள் நிகழ்வுகள் குறித்த முயற்சிகள் நவம்பர் 24ஆம் திகதியளவில் தான் இடம்பெற்றது.

இலங்கை இராணுவத்தினர் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவ முகாம் அமைத்து தங்கியிருந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் (2016) வெளியேறிய நிலையில் துயிலும் இல்லத்தை துப்புரவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. ஒரு சில நாட்களில் மக்களின் திரட்சியுடன் துயிலும் இல்லம் முழுமையாக மாவீரர் நாளுக்கு ஏற்ற வகையில் தயாரானது.

அது மாத்திரமின்றி தமிழர் தாயகத்தில் உள்ள அத்தனை துயிலும் இல்லங்களும் மாவீரர் நாளுக்கு தயாரானது. சிறிலங்கா அரசின் முகத்தில் கரியை பூசும் வகையில், எங்கள் புலி வீரர்களுக்கு விழி நீரால் விளக்கேற்ற மக்கள் திரண்டார்கள். மாவீரர்களை குரலெடுத்து அழைத்த கண்ணீர் வெள்ளத்தாலும் வீரப் பாடல்களினாலும் மாவீரர் துயிலும் இல்லங்கள் ஒளிர்ந்தன. எந்த நிலை வந்தாலும் உங்கள் நினைவுகளை மறக்க மாட்டோம் என்பதை ஈழத் தமிழ் மக்கள் உலகிற்கு உணர்த்தினார்கள்.

அத்துடன் விடுதலைப் புலிகளே எம் மண்ணின் பிள்ளைகள் என்பதையும் அவர்களை நினைவுகூர்வதன் வழியாக அவர்களின் தாகத்தையும் வலியுறுத்தி, ஈழத் தமிழ் மக்களின் சுதந்திர ஏக்கத்தையும் வெளிப்படுத்தினார்கள். மாவீரர் துயிலும் இல்லத்தில் விடுதலைப் புலிகள் காலத்தைபோலவே அதன் மரபுகளுடன் மாவீரர் நாளை அனுஸ்டித்து சிறிலங்கா அரசுக்கு மக்கள் பதில் அளித்தார்கள்.

போரில் இறந்த எவரையும் நினைவுகூரலாம் என்றும் விடுதலைப் புலிகளின் மாவீரர் நாளை நினைவுகூர நாங்கள் தடுக்கவில்லை என்றும் கொழும்பில் ஊடகங்களுக்கு அரச பிரதிநிதி ஒருவர் கூறியிருந்தார். ஆனால் நடைமுறையில் மாவீரர் நாளைக் கண்டு பல அச்சங்களை வெளிப்படுத்திய அரசு, பல அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தியிருந்தது.

முள்ளியவளை துயிலும் இல்லத்தில் காவல்துறையினர் பல இடையூறுகளை ஏற்படுத்தியிருந்தனர். மாவீரர் நாள் கொடிகளை சேதப்படுத்தினார்கள். காந்தள் மலர்களை வைக்கக்கூடாது என்று மிரட்டினார்கள். அவ்வளவு அச்சுறுத்தல்களையும் தாண்டியே அங்கு மாவீரர் நாள் இடம்பெற்றது.

அதேபோல மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் பல இடையூறுகளை அரசின் காவல்துறை ஏற்படுத்தியது. கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் மாவீரர் நாளை தடுக்க பல முயற்சிகள் இடம்பெற்றன. அதனைத் தாண்டி மக்கள் அங்கு மாவீரர் நாள் நிகழ்வுகளை முன்னெடுத்துள்ளார்கள். அத்துடன் கிழக்கில் ஒருவர் கைதும் செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை நீதிமன்ற தடையுத்தரவுகளைப் பெற்று மாவீரர் நாளை தடுக்கவும் சிறிலங்கா காவல்துறையினர் முயற்சிகளை மேற்கொண்ட போதும் தமிழர்கள் தரப்பால் அவை முறியடிக்கப்பட்டன. நவம்பர் 27 அன்று ஒட்டுமொத்த தமிழ் ஈழதேசமும் விளக்குகளால் ஒளிர்ந்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியது.

நிலைமாறு கால நீதியில் நினைவேந்தல்களுக்கு தடைவிதிக்கக்கூடாது என்ற நியதிக்கு அமைவாக மாவீரர் நாளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தாமல் நடந்துகொள்ள வேண்டிய அரசு அநீதியாக நடந்துகொண்டதையும் இந்த மாவீரர்நாள் உணர்த்தியுள்ளது.

இதேவேளை விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களை மௌனித்த பிறகும்கூட, அவர்களுடனான போரை சிறிலங்கா அரசும் அதன் படைகளும் இன்னமும் நிறுத்தவில்லை என்பதையும்கூட இந்த மாவீரர் நாள் உணர்த்தியுள்ளது.

ஆயுதங்களற்ற ஈழத்திலும் அடக்குமுறை வழியாகவும் ஒடுக்குமுறை வழியாகவும் இலங்கை அரசு போரைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதையும் ஈழ தேசம் உலகிற்கு எடுத்துரைத்துள்ளது.

விடுதலைப் புலிகள் என்ற பேரியக்கம் இல்லை. அதன் காவல் இல்லை. படையணிகள் இல்லை. தளபதிகள் இல்லை. என்ற போதும்கூட மாவீரர் நாள் இடம்பெற்றுள்ளது. வீதிகள் முழுக்க இராணுவம் சூழ்ந்துள்ளது.

ஈழ நிலமெங்கும் இராணுவ ஆட்சி கவிந்திருக்கும் நிலையிலும் கூட பல்வேறு அச்சுறுத்தல்களையும் கடந்து மாவீரர் நாளை அனுஷ்டித்தன் வாயிலாக, தமிழ் ஈழ மக்கள் சாவரும் போதிலும் “தணலிடை வேகினும் சந்ததி தூங்காது, எங்கள் தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின் தாகங்கள் தீராது” என்பதை ஒரு பெரும் வலிமைச் செய்தியாக உணர்த்தியுள்ளார்கள்.

இலங்கைத் தீவில், எங்கெல்லாம் தமிழர்கள் அடக்கி ஒடுக்கிப் படுகொலை செய்யப்படுகிறார்களோ அதையெல்லாம் அடையாளப்படுத்தி வரைபடத்தை வரைந்தால் அது தமிழீழமாகும் என்ற கருத்துப்பட தலைவர் பிரபாகரன் அவர்கள் கூறியதைப் போலவே, நவம்பர் 27 எங்கெல்லாம் மாவீரர்களுக்கு விளக்குகள் ஏற்றப்பட்டு நிலம் ஒளிர்ந்ததோ அதுவே தமிழீழம் என்பதும் மாவீரர் நாள் உணர்த்தியுள்ள பெரும் செய்தியாகும்.