எவர் ஆட்சிக்கு வந்தாலும் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படும்:சபா குகதாஸ் பகிரங்கம்


வடக்கு , கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் மாவீரர் நாள் என்பது தமிழர்களின் தேசிய எழுச்சி நாள் ஆகும். இதனை தெற்கில் எவர் ஆட்சிக்கு வந்தாலும்  மக்கள் நினைவு கொள்வதை தடுக்க முடியாது என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ''2024 ஆண்டு மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு பின்னர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச அநுர அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

அதாவது வடக்கு - கிழக்கில் மாவீரர் நாள் உட்பட எந்த நினைவேந்தலுக்கும் எதிர்காலத்தில் அனுமதிக்க கூடாது என எச்சரித்துள்ளார்.

இனவாதம்

கடந்த காலங்களில் அதி உச்சமாக தமிழர்களுக்கு எதிராக இனவாதம் பேசிய வீரவன்ச மீண்டும் அதனை கையில் எடுத்துள்ளார் இச்செயற்பாடு வீரவன்சவின் இயலாமையையும் சிங்கள இனவாதத்தை தூண்டும் வகையிலும் அமைந்துள்ளது.

யுத்தம் மௌனித்த பின்னர் கடந்த கால ஆட்சியாளரின் மிக கோரமான அடக்கு முறைகளை எதிர் கொண்டதுடன் தமிழர் தாயகம் நினைவேந்தல்களை நடாத்த பின் வாங்கியதில்லை.

மாவீரர் நாள் நினைவேந்தல்

தென்னிலங்கையில் யுத்த வெற்றியை கொண்டாடும் போது இன அழிப்பை எதிர் கொண்ட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட உறவுகளை இழந்த தமிழர்களின் மனங்கள் எப்படி குமுறும் என்பதை வீரவன்ச போன்ற இனவாதிகள் புரிந்து கொள்ள வாய்ப்பில்லை.

தமிழர் தாயகப் பகுதிகளில் நடைபெறும் நினைவேந்தல்களை இனவாத நோக்கில் பார்ப்பதுடன் சிங்கள மக்களை எதிராக தூண்டும் குரோத செயற்பாடு மேலோங்குமாயின் நாடு அரசியல் ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ முன்னோக்கி செல்ல ஒரு போதும் வாய்ப்பில்லை என குறிப்பிட்டுள்ளார்.