தலைவர் பிரபாகரனின் வீட்டை தேடிச் சென்ற சாந்தன்

விடுதலைப் புலிகளின் தலைவரது வீடு அமைந்திருந்த பகுதியில் இன்று(04) சாந்தனின் புகழுடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மறைந்த தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் (சாந்தன்) புகழுடலின் இறுதி ஊர்வலம் நகர்ந்து வல்வெட்டித்துறை ஆலடியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பூர்வீக வீடு அமைந்திருந்த காணியிலும் சிறிது நேரம் சாந்தனின் புகழுடல் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது சாந்தனின் புகழுடலுக்கு சிவப்பு மஞ்சள் நிற கொடிகள் போர்க்கப்பட்டு பலரும் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக உடுப்பிட்டி - இலக்கணாவத்தையில் உள்ள சாந்தனின் சகோதரியின் இல்லத்தில் சமய சடங்குகளுடன் இறுதிக்கிரியை நடைபெற்றது.

இறுதி ஊர்வலம் அறிவகம் சனசமுக நிலையம் ஊடாக தர்மகுலசிங்கம் சனசமுக நிலையம் ஊடாக வீரகத்தி விநாயகர் சனசமூகநிலையம் ஊடாக நாவலடி, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை ஊடாக பயணித்தது.

பொலிகண்டி ஊடாக பயணித்து எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நிறைவு பெற்று மாலை புகழுடல் தகனம் செய்யப்படும்.

இறுதி அஞ்சலியில் சமயத் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.