கொலையில் முடிந்த காதல் - பல்கலைக்கழக மாணவி கொலை - வெளியான அதிர்ச்சிகர பின்னணி!

நேற்றைய தினம், கொழும்பு குதிரைப் பந்தய திடலில் கொழும்பு பல்கலைக்கழக மாணவியொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

குறித்த சம்பவம் தொடர்பில், மாணவியின் காதலன் என அறியப்பட்ட கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் வெல்லம்பிட்டிய காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து பல தகவல்கள் வெளிவந்துள்ளன.  

குறித்த சம்பவத்தில், ஹோமாகம - கிரிவத்துடுவ - புபுது உயன பிரதேசத்தில் வசிக்கும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான மற்றும் புள்ளிவிபரவியல் பீடத்தில் படிக்கும் 24 வயதுடைய மாணவியே உயிரிழந்துள்ளார்.

கைது செய்யப்பட்ட அவரது காதலன் சிசுவதா என்பவர் அதே பீடத்தில் மூன்றாம் ஆண்டில் படித்து வருகிறார்.

சம்பவத்தின் பின்னர், உயிரிழந்த மாணவியின் தந்தை ஊடாக சந்தேகநபரின் வாசஸ்தலத்தைக் கண்டுபிடித்த காவல்துறையினர், அவரது வீட்டைச் சோதனையிட்ட போது கொலைக்கு பயன்படுத்திய கூரான கத்தி, இரத்தக்கறை படிந்த டி-சர்ட் மற்றும் பை என்பவற்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

பின்னர் சந்தேகத்திற்குரிய மாணவனை வெல்லம்பிட்டிய காவல்துறையினர் நேற்று பிற்பகல் கைது செய்திருந்தனர்.

கொலை செய்யப்பட்ட குறித்த மாணவி வேறொரு இளைஞனுடன் தொடர்பில் இருந்ததாகவும், இதனால் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு பின்னர் அது உச்சமடைந்து கொலையில் முடிந்துள்ளது.

மேலும், தனது காதலி வேறு ஒருவரைக் காதலிப்பதை விரும்பாத காரணத்தினால் தான் இவ்வாறு கொலை செய்ததாக மாணவன் கூறியதாக ஆரம்பகட்ட காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இருவருக்கும் இடையே இருந்த காதல் உறவை நிறுத்த நேற்று (17ம் தேதி) சந்தித்துக் கொண்டதாகவும், அதற்காகவே இருவரும் கொழும்பு குதிரைப் பந்தய திடலுக்கு வந்ததாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

அப்போது, குறித்த இளைஞன் மாணவியின் கழுத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.