வெலிக்கடை, வெல்லம்பிட்டி ஆகிய பகுதிகளில் முச்சக்கர வண்டிகளை திருடி வந்த சந்தேகநபர் போதைப்பொருளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீதொட்டமுல்ல பகுதியில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தேகநபரை கைது செய்துள்ளனர். வெலிக்கடை மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பகுதிகளில் முச்சக்கர வண்டிகளை திருடிய சம்பவத்தில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். இதன்போது சந்தேகநபரிடமிருந்து 10 கிராம் 400 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
28 வயதுடைய மீதொட்டமுல்ல பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து திருடப்பட்ட 13 முச்சக்கர வண்டிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் திருடிய வாகனங்களின் நிறம், எஞ்சின் இலக்கம், வாகன பதிவு இலக்கம் மற்றும் வாகன இலக்கத்தகடு ஆகியவற்றை மாற்றி ஹோமாகம மற்றும் கிரிந்திவெல ஆகிய பகுதியில் உள்ள இரு நபர்களுக்கு அவற்றை விற்பனை செய்துள்ளதாகவும் விசாரணை அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை சந்தேகநபர் 24 ஆம் திகதி புதுக்கடை இலக்கம் 2 நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் ஏப்ரல் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.