லண்டன் சுவாமிகள் மீது குவியும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள்


பாலியல் குற்றச்சாட்டுக்களின் பெயரில் இம்மாதம் 9 ஆம் திகதி பிரித்தானிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட முறளிகிருஷ்ணா என்ற சாமியார் நேற்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இந்தநிலையில், அவர் கோரியிருந்த பிணை மறுக்கப்பட்டு மீண்டும் காவல்துறையினரின் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றார்.

குறித்த சாமியாரை பிணை எடுப்பதற்காக பலமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

பிரித்தானியாவில் பாலியல் ரீதியிலான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டவர்களுக்கு பிணை வழங்குவதில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற கடுமையான சட்ட நடைமுறைகள் காரணமாக அவருக்குப் பிணை வழங்கப்படவில்லை என்று தெரியவருகின்றது.

இந்தநிலையில் அடுத்த மாதம் 10 ஆம் திகதியளவில் அவர் Crown Court இல் முன்னிலைப்படுத்தப்படும் வரை காவல்துறையினரின் தடுப்புக்காவலில் வைக்கப்படுவார் என்று கூறப்படுகின்றது.

அதேசமயத்தில், பாலியல் ரீதியிலான குற்றச்சாட்டுக்களுக்கு மேலதிகமாக குறித்த சாமியார் மீது அடுக்கடுக்காக மேலும் பல குற்றச்சாட்டுக்கள் புலம்பெயர் தமிழர்களால் சுமத்தப்பட்டு வருகின்றன.

அதாவது சட்டவிரோத பணப்பரிமாற்றங்கள், குடிவரவு குடியகல்வு சட்டமீறல் குற்றச்சாட்டுக்கள் என்று பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ளன.

சில புலம்பெயர் அமைப்புக்கள் சாமியாருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை பாதிக்கப்பட்டவர்களிடம் சேகரித்து அவற்றினை பிரித்தானிய காவல்துறையினரிடம் வழங்குவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றன.

இருப்பினும், சாமியார் மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரங்கள் எதுவுமற்ற தவறான குற்றச்சாட்டுக்கள் என்று கைது செய்யப்பட்டுள்ள சாமியாரின் நிறுவனமான ‘ஓம் சரவணபவ சேவா அறக்கட்டளை’ தெரிவித்துள்ளது.

சாமியாரின் கைது பற்றி அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"இந்த விவகாரத்தை ஆராயாமல் இருக்க உங்கள் ஒத்துழைப்பைக் கோருகிறோம்.

இந்த விடயத்தில் தொடர்புபட வேண்டாம் அல்லது எந்த வடிவத்திலும் எந்தச் செய்திகளையும் அனுப்ப வேண்டாம் என்று நாங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.

நீங்கள் ஏதேனும் செய்தியைப் பெற்றால் பதிலளிக்க வேண்டாம்." என்று அந்த அறிக்கையில் கூறியிருந்ததுடன், அந்தச் செய்திகளை நகலெடுத்து நிர்வாகியுடன் பகிரும்படியும் கூறி ஒரு தொடர்பிலக்கமும் அந்த அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது.

பாபாஜி குற்றமற்றவர் என்பதை உறுதிப்படுத்த தங்களாலான அனைத்து முயற்சிகளையும் அறக்கட்டளை செய்து வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.