பிரிட்டனுக்கு, சிறிலங்கா அரசாங்கம் செலுத்தவேண்டிய பெருந்தொகை

சிறிலங்கா உயர்ஸ்தானிகராலயம் உட்பட லண்டனில் உள்ள பெருமளவிலான வெளிநாட்டு தூதரகங்கள் நெரிசல் கட்டணங்களில் மில்லியன் கணக்கான பவுண்டுகளை செலுத்த வேண்டியுள்ளதாக பிரிட்டனின் வெளிவிவகார அலுவலகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு,பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் நாடளுமன்றத்திற்கான துணைச் செயலாளர் டேவிட் ரட்லி இது தொடர்பாக எழுத்துமூலமான பதில் கடிதமொன்றினை பிரிட்டனின் நாடாளுமன்றத்திற்கு அனுப்பியிருந்தார்.

செலுத்த வேண்டிய கடனின் மொத்த தொகை சுமார் £145 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளதாகவும். அதில், லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் செலுத்த வேண்டிய மொத்த நிலுவைத் தொகையாக £652,120 உள்ளதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

லண்டன் நெரிசல் கட்டணத்தில் இருந்து தூதரகப் பணிகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கு விலக்கு அளிக்க சட்டபூர்வ காரணங்கள் எதுவும் இல்லை எனவும் ரட்லீ சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும், "இராஜதந்திர உறவுகள் மீதான வியன்னா மாநாட்டின் கீழ், இராஜதந்திரிகள் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை மதிக்க வேண்டிய கடமை உள்ளது. எனவே அனைத்து இராஜதந்திர பணிகளும் இங்கிலாந்து சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று பிரிட்டன் அரசாங்கம் எதிர்பார்க்கிறது, இதில் நெரிசல் கட்டணத்தை செலுத்துவதும் அடங்கும்,” என்று அவர் கூறினார்.

சிறிலங்கா மாத்திரமல்லாது இந்த பட்டியலில் மற்றய நாடுகளான அமெரிக்கா, ஜப்பான், போலந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகியவை அடங்குகின்றன.

லண்டன் நெரிசல் கட்டணம் என்பது மத்திய லண்டனில் உள்ள நெரிசல் கட்டண மண்டலத்திற்குள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இயக்கப்படும் பெரும்பாலான கார்கள் மற்றும் மோட்டார் வாகனங்களுக்கு விதிக்கப்படும் கட்டணமாகும்.