வாக்காளர்களுக்கு இலஞ்சம் வழங்குகிறாரா அநுர..


தேர்தலுக்கு முன்னதாக உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அண்மைய கருத்து தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். 

தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதவிலேயே அவர் மேற்கண்ட விடயம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளார். 

குறித்த பதிவில், "தேசிய மக்ள் சக்தியால் நிர்வகிக்கப்படும் சபைகளுக்கு நிதி எளிதாக ஒதுக்கப்படும் என்றும் மற்றவர்களுக்கு அல்ல என்றும் கூறி, ஜனாதிபதி மீண்டும் மீண்டும் வாக்காளர்களுக்கு இலஞ்சம் வழங்கத் தேர்ந்தெடுத்திருப்பது வருந்தத்தக்கது. இது தேர்தல் குற்றமாகும் என்பதால் இது தவறானது” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

நிதி ஒதுக்கீடு 

அத்துடன், "அரசியலமைப்பின் பிரிவு 33 (c), தேர்தல் ஆணையத்தின் வேண்டுகோளின் பேரில், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதற்கான சரியான சூழ்நிலைகளை உருவாக்குவதை உறுதி செய்வதே ஜனாதிபதியின் செயல்பாடுகளில் ஒன்றாகும் என்று கூறுகிறது. 

இந்நிலையில், ஜனாதிபதியின் இந்த நிலைப்பாடு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்குமா?” எனவும் சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

அண்மையில், உள்ளூராட்சி மன்றங்களுக்கான அரசியல் பேரணியின் போது, ​​தேசிய மக்கள் சக்தியால் நிர்வகிக்கப்படும் சபைகளுக்கு எளிதாக பணத்தை ஒதுக்குவேன் என்றும், மற்றவர்களுக்கு அல்ல என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். 

ஜனாதிபதியின் நிலைப்பாடு  

இதனை அடுத்து, ஜனாதிபதியின் இந்த தீர்மானத்திற்கு பல அரசியல் கட்சிகள் கவலைகளை எழுப்பின.

மேலும், வரவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி, தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதியை உடனடியாக அங்கீகரிக்க முடியும் என்று கூறினார்.

இருப்பினும், பிற கட்சிகளால் நடத்தப்படும் சபைகளுக்கு இதைச் செய்ய முடியாது, ஏனெனில் அவை கடந்த காலங்களில் ஊழல் நிறைந்ததாகக் கண்டறியப்பட்டதால் முழுமையான பரிசீலனை தேவை என்று அவர் மேலும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.