ஜி7 நாடுகளின் தலைவர்கள் உக்ரேனுக்கு 50 பில்லியன் டொலர் கடன் வழங்க இணங்கியுள்ளனர்.
முடக்கப்பட்ட ரஷ்யச் சொத்துகளில் இருந்து கிடைக்கும் வட்டியைப் பயன்படுத்தி அந்தக் கடன் தொகை கொடுக்கப்படும். இத்தாலியில் நடைபெறும் ஜி7 நாடுகளின் உச்சநிலை மாநாட்டில் உக்ரேனுக்குக் கடன் கொடுக்கும் உடன்பாடு எட்டப்பட்டது.
ரஷ்யாவுடன் இரண்டு ஆண்டுக்கும் மேலாகத் தொடரும் போரில் கூடுதலான நாடுகளின் ஆதரவைப் பெற உக்ரேன் முயன்று வருகிறது.
இந்தக் கடனுதவி, ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதில் உலகம் ஒன்றுபட்டுள்ளதை ரஷ்யாவுக்குக் காட்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறினார். உக்ரேனுடன் பத்தாண்டுப் பாதுகாப்பு உடன்பாட்டுக்கும் அமெரிக்கா உறுதி தெரிவித்துள்ளது.
அதன்படி அமெரிக்கா உக்ரேனுக்கு ஆயுதங்கள், வெடிபொருட்கள் முதலியவற்றைக் கொடுக்கும். மேலும் அமெரிக்கா அதற்குப் பயிற்சி அளிக்கும், உளவுத் தகவல்களையும் உக்ரேனுடன் பகிர்ந்துகொள்ளும்.
உடன்பாடு, நேட்டோ அமைப்பில் அங்கத்துவம் பெற உக்ரேனுக்குப் பாலமாக அமையும் என்று அந்நாட்டு ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி கூறுகிறார்.
--