சற்றுமுன் நிலவில் தரையிறங்கியது சந்திரயான் 3 - வரலாறு படைத்த இந்தியா

உலக அளவில் கவனத்தை ஈர்த்த சந்திராயன் 3 விண்கலம் சற்றுமுன் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது.

சந்திரனின் தென் துருவப்பகுதியில் முதன்முதலில் தரையிறக்கத்தை மேற்கொண்ட வரலாற்றுப் பெருமையையுடன் இந்தியா முதன்முதலில் சந்திரனில் தனது நடவடிக்கையின் ஆரம்பத்தை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.

இந்தியாவின் உள்ளுர் நேரப்படி மாலை ஆறு மணிக்குப் பின்னர் இந்த மெதுவாக தரையிறங்கம் வெற்றிகரமாக இடம்பெற்ற பின்னர் தென்னாபிரிக்காவில் இருந்து இந்த செய்தியை இந்தியப்பிரதமர் நரேந்திரமோடி உலகுக்கு அறிவித்திருந்தார்.

சந்திரனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள விக்ரம் தரையிறங்கு கலம் இன்று வெற்றிகரமாக தரையிறங்கியமை இந்தியாவின் விண்வெளித்திட்டத்தில் புதிய பதிவை ஏற்படுத்தியுள்ளது.

திட்டமிட்ட படி இந்த தரையிறக்கம் இடம்பெற்றதும் பெங்களுருவில் உள்ள சந்திராயன் திட்டத்தின் கட்டுப்பாட்டு அறையில் மகிழ்ச்சியும் ஆரவாரமும் நிலவியது.

முன்னதாக தரையிறக்குவதற்காக தெரிவு செய்யப்பட்ட இடத்திற்கு திட்டமிட்டபடி சென்ற இந்தக்கலம் அதன்பின்னர் கட்டுப்பாட்டு அறையில் வழங்கப்பட்ட உத்தரவுடன் தரையிறங்கியுள்ளது.

இந்த நிகழ்வு நேரலையாக ஒளிபரப்பட்டபோது தென்னாபிரிக்காவில் இருந்து இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியும் அதனை நேரடியாக பார்வையிட்டிருந்தார். 

தரையிறங்கு கலத்தை மெதுவான மிதமான முறையில் தரையிறக்குவது மிகப் பெரிய சவாலாக கருதப்பட்ட நிலையில், அதனை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.   

சந்திரயாயன் திட்டத்தின் வெற்றிக்காக இன்று இந்தியா தழுவிய ரீதியில் சிறப்பு பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

615 கோடி இந்திய ருபாயில் வடிவமைக்கட்ட இந்தக் கலம் எல்விஎம்-3 உந்துகணைமூலம் கடந்த ஜூலை 14ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்டது.

40 நாள் பயணத்துக்கு பின்னர் இன்று அது சந்திரனில் தரையிறங்கியுள்ளது.

சந்திரனின் தென் துருவத்தில் பல பில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளி படாத ஆழமான பள்ளங்களில் தண்ணீர் உறைந்த நிலையில் இருப்பதாக கருதப்படுவதால் சந்திரனில் மனிதர்கள் வசிக்கும் சூழ்நிலையை உருவாக்கும் சோதனைகளுக்கு உந்துசக்தியாக இந்த ஆய்வுகள் மாறும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். 

இந்தவாரம் இதேபோன்ற ஒரு தரையிறக்கத்தை செய்ய முயன்ற ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் சந்திரனில் விழுந்து நொறுங்கிய நிலையில், சந்திரயானின் இன்றைய நகர்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

இதன்மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நிலவில் தரையிறக்கத்தை மேற்கொண்ட 4 ஆவது நாடாக இந்தியா பதிவாகியுள்ளது.

இதன்மூலம், நிலவின் தென் துருவத்தில் கால் பதிக்கும் உலகின் முதல் நாடாக இந்தியா தன் சாதனையைப் பதிவு செய்துள்ளது.