லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டது - மின்சாரக் கட்டணத்திலும் திருத்தம்!


இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
 
கொழும்பில் இன்று (04) முற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அந்த நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
 
இதன்படி அதன் புதிய விலை 3,790 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
அதேநேரம், 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,522 ரூபாவாகும்.
 
2.3 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 28 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 712 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் 2024ஆம் ஆண்டின் 2ஆம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டண முன்மொழிவு, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இந்த வாரம் அனுப்பி வைக்கப்படவுள்ளது.
 
வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது எக்ஸ் தளத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
ஒவ்வொரு ஆண்டும், காலாண்டிற்கு ஒரு தடவை மின்சாரக் கட்டணத்தில் திருத்தம் செய்ய கடந்த ஆண்டு அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டது.
 
இதற்கமைய, எதிர்வரும் ஜூலை மாதத்தில் திருத்தம் செய்யப்படவுள்ள மின்சாரக் கட்டண திருத்த முன்மொழிவு, இந்த வாரத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.