இந்தியப் பிரதமருக்கு கடிதம் அனுப்புவதில் தமிழர் தரப்புக்குள் குழப்பம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் தேசிய கட்சிகளினால் கடிதம் அனுப்பி வைக்கப்படவிருந்த நிலையில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இலங்கை தமிழரசுக் கட்சிக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியால் தயாரிக்கப்பட்ட கடிதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சி வலியுறுத்தியதை தொடர்ந்து தனித்து கடிதம் அனுப்பவுள்ளதாக அந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சி தவிர்த்து ஏனைய கட்சிகளின் ஒப்புதலுதுடன் குறித்த கடிதம் விரைவில் பிரதமர் மோடிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்றைய ஊடக சந்திப்பில் குடிசன மதிப்பீடு, இந்திய கடற்றொழிலாளர்கள் விவகாரம், இந்திய பிரதமருக்கான கடிதம் தொடர்பான விடயங்களை அவர் தெரிவித்துள்ளார். 

ஈழத் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள், அரசியல் தீர்வுகளை சுட்டிக்காட்டி சிறிலங்கா அதிபருக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்தியப் பிரதமருக்கு தமிழ்க் கட்சிகள் பல இணைந்து ஒருமித்து கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், இந்த முரண்நிலை பதிவாகியுள்ளது.

இவ்வாறானதொரு சூழலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனியாக இந்திய பிரதமருக்கு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளது.

திம்பு கோட்பாட்டின் அடிப்படையில் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தி தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடிதம் தனது கடிதத்தை அனுப்பி வைத்துள்ளது.

13 ஆவது திருத்தச் சட்டமானது தமிழ் மக்களை அடிமைகளாக வைத்திருப்பதை மாத்திரம் இலக்காகக் கொண்டு அமைந்துள்ளமையினால் அதனால் எந்தவொரு தீர்வும் கிடைக்காது என அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.