வடக்கில் சரத் வீரசேகரவுக்கு எதிராக வீதிக்கு இறங்கிய சட்டத்தரணிகள்

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் கருத்தினை கண்டித்து யாழ். நீதிமன்ற கட்டிட தொகுதிக்கு முன்பாக சட்டத்தரணிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர 22.08.2023 ஆம் திகதி அன்று முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக அவதூறு பரப்பும் வகையிலும், நீதித்துறை சுதந்திரத்தை கேள்விக்குட்படுத்தும் வகையில் நாடாளுமன்றில் உரையாற்றியுள்ளார்.

இந்த உரையைக் கண்டித்தும், எதிர்ப்புத் தெரிவித்தும் குறித்த கண்டன போராட்டம் இன்று (25.08.2023) காலை 9.30 மணி முதல் 10.30 மணிவரை இந்த அடையாள கண்டனப் போராட்டம் நடைபெற்றுள்ளது.

இந்த அடையாள புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் ஏனைய கிளைச் சங்கங்களும் தத்தமது நீதிமன்றங்களில் குறித்த அடையாள கண்டன போராட்டத்தினை மேற்கொண்டதாக கூறப்படுகின்றது.

அத்துடன் யாழ்.சாவகச்சேரி நீதிமன்ற சட்டத்தரணிகளும் இன்று காலையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது கறுப்புத் துணிகளால் வாய்களை மூடியவாறு சட்டத்தரணிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

போராட்டம் இடம்பெற்ற நேரத்தில் யாழ்ப்பாணத்தில் நீதிமன்ற செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 


வவுனியா 

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் கருத்தினை கண்டித்து வவுனியா சட்டத்தரணிகளும் இன்று (25.08.2023) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்த சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் அன்ரன் புனிதநாயகம், நிலுவையில் உள்ள குருந்தூர் மலை தொடர்பான வழக்கினை விசாரித்து வரும் நீதிபதியைப் பாதிக்கும் வகையிலான கருத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர தெரிவித்திருந்தார்.

இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அத்துடன் அவர் நாடாளுமன்ற வரப்பிரசாதத்தைப் பயன்படுத்தியே இவ்வாறு கதைக்கிறார்.

முடிந்தால் அவர் வெளியில் வந்து இவ்வாறு கதைக்கவேண்டும். அவரது உரை தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தலைவருக்கு முகவுரையிடப்பட்டு, ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சர், நீதிச்சேவைகள் ஆணைக்குழு ஆகியவற்றிற்கு அதன் பிரதிகளை அனுப்பி இருக்கின்றோம்.

இந்த கடிதமானது வடக்கு கிழக்கில் அமைந்துள்ள அனைத்து சட்டத்தரணிகள் சங்கம் சார்பிலும் அனுப்பப்படவுள்ளது என தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், நீதியான சட்டவாட்சி நடைமுறைப்படுத்தப்படுவதைத் தடுக்காதே, அரசியல் வாதிகளே நீதிபதிகளைச் சுதந்திரமாகச் செயற்படவிடுங்கள், நீதிபதிக்கு மரியாதை கொடுங்கள், நீதித்துறையில் அரசியல் தலையிடு ஏன் போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தமை குறிப்பிடத்த்கது. 


முல்லைத்தீவு  

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் கருத்தினை கண்டித்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் முன்பாக நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து அடையாள கண்டன போராட்டம் இன்று (25.08.2023) சட்டத்தரணிகளால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த போராட்டத்தில் கௌரவ நீதிபதிகளின் கடமையில் தலையிடாதே, சுயாதீனமான நீதித்துறையின் செயற்பாட்டை உறுதி செய்யுங்கள், நீதித்துறையின் சுதந்திரத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தாதே, நாடாளுமன்ற சிறப்புரிமையை துஷ்பிரயோகம் செய்யாதே, கௌரவ நீதிபதிகளின் கட்டளைகளுக்கு மதிப்பளி போன்ற பல்வேறு வாசகங்கள் தாங்கிய பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.


கிளிநொச்சி 

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் கருத்தினை கண்டித்து கிளிநொச்சி நீதிமன்ற சட்டத்தரணிகள் அடையாள கண்டனப்போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டமானது இன்று (25.08.2023) காலை 9.30 மணி முதல் 10.30 மணிவரை கிளிநொச்சி நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.


மன்னார் 

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் கருத்தினை கண்டித்து மன்ளார் நீதிமன்ற சட்டத்தரணிகள் அடையாள கண்டனப்போராட்டம் ஒன்றை இன்று (25.08.2023) முன்னெடுத்துள்ளனர்.

குறித்தபணிப்பகிஷ்கரிப்புக்கு எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் தனது சிறப்புரிமையைப் பயன்படுத்தி நீதித்துறையை அவமதிக்கும் விதத்தில் அல்லது விமர்சிக்கும் விதத்தில் நடந்து கொள்ளக் கூடாது என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

மேலும் இவ்வாறான அவதூறு ஏற்படுத்தும் கருத்துக்கள் இடம் பெற்றால் அதனை ஹன்சாட்டில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளைச் சபாநாயகர் முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர்.