கொலம்பியாவில் மண்சரிவு: 33 பேர் உயிரிழப்பு மேலும் பலர் மாயம்


தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் ஏற்பட்ட மண்சரிவில் 33 போ் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடா் மேலாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன் தினம் (12) இந்த மண்சரிவு இடம்பெற்றுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த அனர்த்தம் குறித்து கொலம்பியாவின் தேசிய பேரிடா் மேலாண்மைத் துறை அதிகாரிகள் மேலும் தெரிவித்ததாவது, 

குயிபோ, மெடெலின் நகரங்களுக்கு இடையிலான மலைப் பகுதியில் நேற்று முன்தினம்(12) இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த மண்சரிவில் சிக்கி புதையுண்டு 33 போ் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனா், இந்தச் சம்பவத்தில் மேலும் சிலா் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிரவும் உயிரிழந்தவர்களின் 17 பேரின் உடல்கள் தடயவியல் பரிசோதனைக்காக மெடலினுக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், மீட்புப்பணிகள் தொடர்ந்தும் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இருப்பினும், மழையின் காரணமாக மீட்புப் பணிகளில் இடா்பாடு ஏற்பட்டுள்ளதாகத் பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனவே, மழை காரணமாக இந்த நிலச்சரிவு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.