தமிழர் காணி அபகரிப்பு தொடர்பில் செந்தில் தொண்டமான் மீதான குற்றச்சாட்டு உண்மையல்ல


வடக்கு - கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் காணிகளை அபகரிக்கும் செயற்பாட்டின் பின்னணியில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் (Senthil Thondaman) இருப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தி உண்மைத்தன்மை அற்றது என பொதுமகன் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். 

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் உள்ள புலம்பெயர் தமிழர்களுக்கு சொந்தமான காணிகள் பல்வேறுபட்ட வழிகளில் மோசடி கும்பல்களால் அபகரிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், மாங்கேணியில் உள்ள தமிழர் ஒருவரின் காணி ஒன்று அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் பின்னணியில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் செயற்பட்டுள்ளதாகவும் குறித்த காணியை அதன் உரிமையாளர் மீண்டும் பெற வேண்டுமென்றால் 50 இலட்சம் பணம் செலுத்த வேண்டுமெனெவனும் சிங்கள செய்தி தளமொன்றில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயும் முகமாக அந்த செய்தித் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காணி உரிமையாளரின் தொடர்பு இலக்கங்களை தேடியெடுத்து அவரை தொடர்பு கொண்டு இந்த விடயம் குறித்து வினவினோம்.

அப்பொழுது அந்த காணி உரிமையாளர் இந்த காணி விடயத்திற்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லையெனவும், குறித்த செய்தி தளத்தில் வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் போலியானது எனவும்  எம்மிடம் தெரிவித்தார். 

மேலும், அந்த காணியை இதற்கு முன் கைப்பற்ற நினைத்த சிலர் அவர்களுடைய அரசியல் இலாபத்திற்காகவும் கிழக்கு மாகாண ஆளுநர் மீது சேறுபூசுவதற்காகவும் இவ்வாறான போலி விடயங்களை பரப்புவதாக குறிப்பிட்டார்

அவர் எம்மிடம் கூறிய கருத்துக்களை வைத்து பார்க்கும் போது குறித்த சிங்கள செய்தி தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் போலியானது என்பது உறுதியாகின்றது.

அத்துடன், புலம்பெயர்ந்து வாழும் உங்களுடைய காணிகள், வடக்கு - கிழக்கு மாகாணங்களில் இருக்குமாயின் அவற்றின் உறுதிபத்திரங்கள், பாதுகாப்பு மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து தெரிந்துகொள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்களை நீங்கள் தொடர்பு கொள்ளமுடியும்.