வடக்கில் காணி பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு - ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு..!

வடக்கில் காணி பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வடக்கு மாகாணத்தில் காணி விடுவிப்பு செயற்பாடுகளை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் காணி பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காணி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை, பலாலி விமான நிலையம் மற்றும் பாதுகாப்பு துறைக்கு தேவையான காணிகள் தொடர்பில் எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் இறுதி தீர்மானத்தை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இதேவேளை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்ட நால்வரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகில் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட போது அத்துமீறி நுழைய முற்பட்டமைக்காக குறித்த நால்வரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் வாக்குமூலத்தை பெற்றதை அடுத்து பொலிஸ் பிணையில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேநேரம் நேற்றைய தினம் இரவு யாழில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற நிகழ்வின் போது கில்மிஷாவை நேரில் அழைத்து பாராட்டி தனது வாழ்த்துக்களையும் ஜனாதிபதி தெரிவித்தார்

இதன்போது ஜனாதிபதி முன்னிலையில் கில்மிஷா பாடலும் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.