இலங்கையை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்! பெற்றோர் கூறுவது என்ன..

சுகாதாரத்துறையில் உள்ள வைத்தியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் கவனக்குறைவால் ஹம்தி பஸ்லிம் எனும் மூன்றரை வயதுடைய குழந்தை உயிரிழந்ததாக பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

குறித்த சிறுவனின் கடைசி தருணங்களை நன்கு அறிந்தும் வைத்தியாசாலையில் இருந்த தாதிமார் மற்றும் வைத்தியர்கள் அவருக்கான சிகிச்சையை உரிய முறையில் வழங்கவில்லை என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

பெற்றோர் கூறுவது என்ன?

கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர், சிறுநீரகத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஹம்தி பஸ்லிம் எனும் மூன்றரை வயதுடைய குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, அவருடைய ஒரு சிறுநீரகத்தை மாத்திரம் அகற்ற வேண்டுமென வைத்தியர்கள் வலியிறுத்தியதையடுத்து, குறித்த குழந்தைக்கு கடந்த வருடம் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும், சத்திர சிகிச்சையின் போது வைத்தியர்கள் கவனயின்மையால் குழந்தையின் இரு சிறுநீரகங்களையும் அகற்றியுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இதனை சத்திர சிகிச்சையின் பின்னர் வைத்தியர்கள் அறிந்து கொண்டுள்ளதாகவும் வைத்தியர்கள் தரப்பில் நடந்த தவறை அவர்கள் ஒப்புக் கொண்டதாகவும் பெற்றோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமது குழந்தைக்கு நான்கு மாதங்களில் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை மேற்கொள்வதாக வைத்தியர்கள் உறுதியளித்திருந்தாலும், அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து, ஹம்தி பஸ்லிமுக்கு சுமார் ஏழு மாத காலத்துக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டாலும், சரியான சிகிச்சைகள் வழங்கப்படாத காரணத்தால் அவர் உயிரிழந்ததாக பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் நாயகம், வைத்தியர்களின் கவனக்குறைவால் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சை மற்றும் இதனால் பாதிக்கப்பட்ட தமது குழந்தையின் நிலை குறித்து அறிந்திருந்தாலும், இது தொடர்பான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என ஹம்தி பஸ்லிமின் பெற்றோர் மேலும் கூறியுள்ளனர்.