மனசாட்சி இருக்கும் யாரும் இவரை தமிழராய் ஏற்றுவிடாதீர்கள்..!

இப்படி பிள்ளைகளை பெற்றதற்கு என்ன பாவம் செய்தாளோ என் தமிழ் தாய்.

நெஞ்சு பொறுக்கலையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்துக்கொண்டால்...   

இப்படி எல்லாம் சனம் புலம்பிக்கொண்டு தெரியுது.. அப்படி என்ன நடந்திருக்கும்.

ஓம் இண்டைக்கு ஒரு சம்பவம் குருந்தி விகாரையென்று குருந்தூர்மலையில் புத்தரை குடியேற்றினார்கள் அல்லவா? அந்த குடியேற்ற காணிக்குள் காவி அணிந்து சிங்கள பௌத்த கைக்கூலி நானும் என்று ஒருவர் போய் நின்றிருக்கிறார் பாருங்களேன்.   

நேற்று முந்தநாள் பிள்ளையார் கோவிலுக்குள் விகாரை, சவேந்திர சில்வா ஆக்கிரமிப்பாளர் இப்படியெல்லாம் கதையளந்தவர் இன்று சிங்கள தேரருடன் சேர்ந்து பழைய குருடி கதைய திறவடி என்பது போல அகற்றப்பட்ட சிலையொன்றை தூக்கி வைத்தாராம். 

இவரைப் பொறுத்தவரை ஒரு பெயர் இருக்கிறது.  முல்லைக்கு தேர் குடுத்த பாரி கேள்விப்பட்டிருப்பீர்கள், மயிலுக்கு போர்வை ஈந்த பேகனைக்கூட தெரிந்திருக்கும். பிக்குவுக்கு வேட்டியீந்த கோமகனைத் தெரியுமா? அவர் இவர் தான்.  கொஞ்ச காலத்திற்கு முன் நடந்து போன கதை.

அது இருக்கட்டும் இப்போது என்னவென்றால், சிவசேனை என்று பெயர் வைத்துக்கொண்டு சிவன்கோவிலை இடித்து தள்ளிக்கொண்டிப்பவர்களோடு உறவு கொள்ளப்போயிருக்கிறார் இந்த பெரிய மனிதர்.   

போன கிழமை பொங்கல் பானையை எட்டி காலால் உதைத்தார்கள் அதைக் கேட்க வக்கில்லை.   

சிலமாதங்களுக்கு முன் வெடுக்குநாறி மலையில் சிவலிங்கம் இடித்தெறியப்பட்டது. அது கேட்க வக்கில்லை.

சில ஆண்டுகளுக்கு முன் நீராவியடியில் கோவில் வளவில் பிக்குவின் உடலை எரித்தார்கள்  அதைக் கேட்க வக்கில்லை.

தையிட்டியில் மக்கள் காணியில் குடியேறிய புத்தர்.. அதைக் கேட்க வக்கில்லை.

கிழக்கில் மத்தளமலையில் புத்தரின் பெயரால் நடந்த அலங்காரங்களை கேட்க வக்கில்லை.

மலைநீலியம்மன் ஆலயத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு நடுவீதியில் கிடத்தப்பட்டு புத்தர் குடியேறினார் அதைக்  கேட்க வக்கில்லை.

இலங்கைத்துறை மலையில் இடம்பிடித்த புத்தர் அங்கு இருந்த கோவில் அகற்றப்பட்ட கதையைக் கேட்க வக்கில்லை.   

செம்பிமலையில் நடந்த ஆக்கிரமிப்புகள் பற்றிக் கேட்க வக்கில்லை.

இப்படி வடக்கு கிழக்கில் புத்தரை குடியேற்றி நிலம்பிடிக்கும் நிலப்பேய்களை அங்கு காவியுடையில் அலையும் பூதங்களை கேட்க வக்கில்லாத இந்த சிவசேனைத் தலைவர் குருந்தூர் மலையில் அமைக்கப்பட்ட சட்டவிரோத விகாரையில் இருந்து அகற்றப்பட்ட புத்தர் சிலையை கல்கமுவ சாந்தபோதி தேரருடன் சேர்ந்து மீண்டும் நிறுவியிருக்கிறாராம்.   

படிப்பது தேவாரம் இடிப்பது சிவன்கோவில் என்றாற்போல ஆண்டாண்டுகளாக எங்களை அடிமைப்படுத்த துடித்துக்கொண்டிருப்பவர்களை, ஆயிரக்கணக்கில் அந்தச் சிங்களவர்களால் அப்பாவித் தமிழர்களை கொன்ற இன்றைய யூலை 23(கருப்பு ஜூலை) இல் உறவுகொண்டாடப்போனாராம் இவர்.

இவரது செயலுக்கு - மனசாட்சி இருக்கும் தமிழர் யாரும் இவரை தமிழராய் ஏற்றுவிடாதீர்கள், இவர் போல் கொஞ்ச பேர் இருந்தால் காணும் என பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.