கொக்குத்தொடுவாயில் அதிரடிப்படையினரின் செயலால் கிளம்பிய சர்ச்சை

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் மீட்கப்படும் அகழ்வுப் பொருட்களை விசேட அதிரடிப்படையினர் சிலர் கையுறையின்றி வெற்றுக் கைகளால் எடுத்து ஆய்வுகளை மேற்கொள்ளும் செயற்பாடு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த 6ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் குறித்த பகுதியிலிருந்து மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், விடுதலைப் புலிகளின் சைனட் குப்பி ஒன்றும், இரண்டு இலக்கத் தகடுகளும் தடயப் பொருட்களாக எடுக்கப்பட்டுள்ளன.

ஏழு நாட்கள் அகழ்வாய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை 9 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இது குறித்து முல்லைத்தீவு சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா அகழ்வுப் பணிகள் தொடர்பில் கூறுகையில், இந்தப் புதைகுழியிலுள்ள எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மிக நெருக்கமாக, ஒன்றுடனொன்று பின்னிப் பிணைந்து காணப்படுவதால், அகழ்வாய்வு செய்வதற்கு அதிக நேரத்தைச் செலவிட வேண்டியுள்ளது.

இந்த நிலையில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளும்போது, சில நாட்களில் ஓரிரு எலும்புக்கூட்டுத் தொகுதிகளையே அகழ்ந்தெடுக்க முடிகின்றது. குறித்த மனிதப் புதைகுழியிலுள்ள எலும்புக்கூட்டுத் தொகுதிகளையும், தடயப் பொருட்களையும் எடுத்தாலே, இது தொடர்பில் சரியான ஆய்வுகளை மேற்கொள்ள முடியும். எனவே, அகழ்வாய்வுப் பணிகளின் காலத்தை வரையறுக்க முடியாதுள்ளது.

ஏற்கனவே அகழப்பட்டுள்ள குழியிலிருந்து மனித எச்சங்களையும், தடயப் பொருட்களையும் முழுமையாக அகழ்வாய்வு செய்து எடுப்பதற்கு ஒரு சில வாரங்கள் நீடிக்கலாம் என நினைக்கின்றேன். அதனைவிட இன்னும் மேலதிகமாக குழியைத் தோண்டி அகழ்வாய்வுகள் மேற்கொள்வதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் எனக் கூறமுடியாது.

இந்தப் புதைகுழி தொடர்பிலான அறிக்கைகள், அகழ்வாய்வு செய்யும் குழுவினரால் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்படும். அகழ்வாய்வில் எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளும், தடயப் பொருட்களும் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள பிரேத சாலையில் விசேட அறையில் வைக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே இவ்வாறு கையுறையின்றி தடயப் பொருட்களை கையாளும் போது அவற்றிலிருக்கும் தடயங்கள் சிதைவடைவதற்காக சாத்தியம் காணப்படுவதாக சமூக அவதானிகள் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்

அத்துடன் குறித்த பகுதியில் பாதுகாப்பின் நிமித்தமே விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போதும், கையுறையின்றி தடயப்பொருட்களை கையாளும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், இதற்கான அதிகாரம் எவ்வாறு வழங்கப்பட்டது மற்றும் இது தொடர்பான போதிய தெளிவில்லாதவர்களை இந்த செயற்பாட்டில் ஈடுபடுத்தியது யார் என்றவாறான கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

கையுறையின்றி தொல்லியல் பொருட்களை கையாள முடியும் காரணம் அவை நூற்றாண்டுகள் கடந்தவை, தற்போது அகழப்படுவது நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் புதைந்துள்ள தொல்லியல் பொருட்கள் இல்லை என அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் கைகளில் உள்ள வியர்வை, கைகளில் ஒட்டியிருக்கும் வேறு பகுதியை சேர்ந்த மண் மற்றும் இரசாயனங்கள் உள்ளிட்ட பொருட்கள் என்பன கையுறையின்றி தடயப்பொருட்களை தொடுவதன் காரணமாக அவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இவை குறிப்பாக இரசாயன பகுப்பாய்விற்கு உட்படுத்தப்படும் போது முடிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் சாத்தியம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.