நாளை முடங்கப்போகும் வடக்கு, கிழக்கு - பல தரப்பில் இருந்தும் பேராதரவு


கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவத்தை, கண்காணிப்பை வலியுறுத்தியும் நாளை வெள்ளிக்கிழமை (28) இடம்பெறவுள்ள மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கும் பூரண ஹர்த்தாலுக்கும் பல தரப்பிலுருந்தும் முழுமையான ஆதரவு கிடைக்கப்பெற்று வருகிறது.

28 ஆம் திகதி முல்லைத்தீவு நீதிமன்றுக்கு அருகில் மக்கள் இறுதி யுத்தத்தில் உறவுகளை இராணுவத்திடம் கையளித்த பகுதிக்கு அண்மையில் ஆரம்பிக்கும் கவனயீப்பு பேரணியானது முல்லைத்தீவு நீதிமன்றுக்கு முன்பாகச் சென்று மாங்குளம் முல்லைத்தீவு வீதியூடாக மாவட்ட செயலகத்தை வந்தடைந்து அங்கு மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம் ஒன்றும் மேற்கொள்ளப்படவுள்ளது.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரத்தில் நீதி கோரியும், சர்வதேசத்தின் கண்காணிப்பை வலியுறுத்தியும் நாளை (28.07.2023) வடக்கு – கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படவுள்ள முழு அடைப்புப் போராட்டத்திற்கு யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் பூரண ஆதரவினை வழங்குகின்றது.

அதேவேளை இலங்கையின்; தமிழர் பிரதேசங்களில் இதுகால வரையிலும் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் விவகாரங்கள் பூசி மெழுகப்பட்டு, காத்திரமான நடவடிக்கைகள் எதுவுமின்றி நீர்த்துப்போகச் செய்யப்பட்டமையே வரலாறு.

இதேபோன்று மேற்படி கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்திலும் நடைபெறாது இருக்க வேண்டும் என்பதோடு, கொக்குத் தொடுவாய் மனித புதைகுழி உட்பட தமிழர் பிரதேசங்களில் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து மனிதப் புதைகுழிகளும் உரிய வகையில் சர்வதேச கண்காணிப்புடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மைகளை வெளிக்கொணர வேண்டியது அவசியமானது என்பதனை இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இவ்விவகாரத்தின் நியாயத்தன்மையினை புரிந்துகொண்டு, இதனை தமது தனிப்பட்ட சுயலாபங்களுக்கோ, அரசியல் தேவைகளுக்கோ பயன்படுத்தாது உண்மையான தீர்வினை வலியுறுத்தி சிங்கள முற்போக்கு சக்திகள் உட்பட்ட அனைத்து தமிழ்த் தரப்பினரும் ஒன்றிணைந்து போராட வேண்டுமென்பதோடு அனைவரினதும் முழு ஆதரவினையும் வேண்டி நிற்கிறோம். 

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முல்லைத்தீவில் நாளை 28 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கு அனைவரும் திரண்டு வந்து ஆதரவளிக்குமாறு முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நேற்று மாலை நடாத்திய ஊடக சந்திப்பில் அவர் குறித்த அழைப்பை விடுத்துள்ளார்.

ஹர்த்தாலுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முழு ஆதரவு!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரியும், சர்வதேச பொறிமுறைகளை வலியுறுத்தியும் நாளை வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் இடம்பெறவுள்ள மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கும் பூரண கடையடைப்பிற்கும் ஆதரவு வழங்குமாறு கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

அன்றைய தினம் வடக்கு கிழக்கு 8 மாவட்டங்களிலும் கடைகளை மூடி பூரண ஒத்துழைப்பினை வழங்குமாறு கிளிநொச்சி மாவட்டத்தின் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சினி கேட்டுக்கொண்டுள்ளார்.

முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் மனித புதைகுழி விவககாரத்திற்கு நீதிகோரியும், சர்வதேச கண்காணிப்பை கோரியும் நாளை வெள்ளிக்கிழமை வடகிழக்கில் அனுஷ்டிக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணி  ஆதரவு தெரிவித்துள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் மாவட்டச் சங்கங்களின் தலைவிகள் கூட்டாக இந்த ஹர்த்தாலுக்கான அழைப்பை விடுத்திருந்த நிலையில் தமிழரசு கட்சி, தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஆகியன தமது ஆதரவை தெரிவித்துள்ளன.

ஹர்த்தால் வெற்றியடைய வடக்கு - கிழக்கில் வாழும் அனைத்துத் தமிழ்மக்கள், முஸ்லிம் மக்கள் மற்றும் நீதி, நேர்மையை விரும்புகின்ற சிங்கள மக்கள் தங்களின் பூரண ஆதரவை வழங்க வேண்டுமெனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து தெரிவிக்கையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கங்கள் கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரத்தில் ஒரு சர்வதேச விசாரணையைக்கோரி நிற்பதை நாம் வரவேற்கிறோம், ஆதரவளிக்கிறோம்.

அவர்களுக்கு கடும் அழுத்தங்கள் நிலவும் என்பதில் எவ்வித சந்தேகங்களுமில்லை. அதற்கு மத்தியிலும் அவர்கள் ஹர்த்தால் அனுஷ்டிக்கும் தீர்மானம் எடுத்திருப்பதை நாம் ஆதரிக்கின்றோம் என்றார்.

வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு 

நாளை 28ஆம் திகதியை துக்க நாளாக அறிவித்துள்ளமையை நாமெல்லாம் ஆதரித்து ஹர்த்தாலாக கடைப்பிடிக்கவேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அழிப்பிற்கு ஆளாகிய தமிழின மக்களின் இக்காலம் துக்க காலமாகும். தங்கள் தேசத்துக்கு, தமிழ் மக்களுக்கு நீதிகோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளான தாய்க்குலம் ஆராத் துயருடன் கண்ணீரும் கம்பலையுமாய் நாளை 28ம் திகதியை துக்க நாளாக அறிவித்துள்ளமையை நாமெல்லாம் ஆதரித்து ஹர்த்தாலாக கடைப்பிடிக்கவேண்டும்.

தமிழர் புதைகுழிக்குள் புதைக்கப்பட்டு அழிக்கப்பட்டமை இலங்கையில் கறைபடிந்த வரலாறாயினும் அந்த ஆத்மாக்களுக்கு ஆறுதலும் வருங்கால தமிழினத்திற்கு நீதியும் விடுதலையும் கிடைக்க வேண்டி நடைபெறும் கிளர்ச்சிகளையும், போராட்டங்களையும் ஆதரித்து கடைப்பிடிக்க வேண்டியது நம் கடப்பாடாகும் எனக் கூறி யுள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவத்தை, கண்காணிப்பை வலியுறுத்தியும் நாளை (28) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கும் பூரண ஹர்த்தாலுக்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்திருந்தனர். 

இவர்களின் கோரிக்கையை ஏற்ற முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், பூரண ஆதரவு வழங்குவதோடு நாளை (28) போக்குவரத்து சேவைகள் எவையும் இடம்பெறாது என தெரிவித்துள்ளது.