கொக்குதொடுவாய் மனித புதைகுழி விவகாரம் : அகழ்வு பணி தொடர்பில் வெளியான புதிய தகவல்

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பித்து தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவ தெரிவித்தார்.

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நேற்று (30.10.2023) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், நீதிமன்றத்தின் பாதுகாப்பிலுள்ள மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள், உடுப்புக்கள் தவிர்ந்த ஏனைய சான்றாதார பொருட்கள் மேலதிக பகுப்பாய்விற்காக தொல்லியல் மேற்படிப்பு நிறுவனத்திற்கு அனுப்ப நீதிமன்றத்தின் உத்தரவினை பெற விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் எமக்கு இருக்கும் நிதியை கொண்டு அகழ்வு பணியினை நவம்பர் 20 ஆம் திகதி ஆரம்பிப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில் புதைகுழிக்குள் நீர் தேங்காதவாறு போடப்பட்டுள்ள கொட்டகையானது மேலும் 10 அடிக்கு நீட்டப்பட்டுள்ளது. இரண்டு சீசிரீவி கமரா தொகுதியானது எனது வேண்டுகோளினையடுத்து அண்மையில் அரசாங்க அதிபரினால் பொருத்தப்பட்டுள்ளது.

இம்முறை அகழ்வுபணி நடைபெறும் போது ராடர் என்ற கருவியை பாதுகாப்பு அனுமதியை பெற்று பரீட்சித்து பார்க்க எதிர் பார்த்துள்ளோம்.

இதன் மூலம் எவ்வளவு தூரத்திற்கு குறித்த புதைகுழியானது உள்ளது என அடையாளப்படுத்தி கொள்ள கூடியதாக இருக்கும். நிதியினை மாவட்ட செயலகத்தினை சேர்ந்த பிரதான கணக்காளர் தான் கையாளுகின்றார்.

நீதிமன்ற கூற்றுப்படி 2.5 மில்லியன் வரையிலான நிதி இருப்பதாக தெரிவித்திருந்தார். அவ் நிதி இரண்டு வாரங்களுக்கு அகழ்வுபணி மற்றும் ஏனைய பணிகளை மேற்கொள்ள போதுமானதாக இருக்கும் என மேலும் தெரிவித்தார்.