இலங்கையின் சிங்கள ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்ற கில்மிஷா : வரலாற்றில் பதிவான முதல் வெற்றி


தென்னிந்தியாவின் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற சரிகமப இசை நிகழ்ச்சியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுமி கில்மிஷா வெற்றி பெற்றுள்ளார்.

நேற்றைய தினம் (17) இடம்பெற்ற இறுதிச் சுற்று போட்டியில், கில்மிஷா வெற்றிவாகை சூடினார்.

தென்னிந்திய தொலைக்காட்சிகளில் நடைபெறும் இசை போட்டி நிகழ்வொன்றில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும்...

குறித்த இசை நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து அசானி மற்றும் கில்மிஷா ஆகிய இரு சிறுமிகள் கலந்து கொண்டிருந்த நிலையில் இறுதிச் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை அசானி தவற விட்டிருந்தார்.

இந்தநிலையில், இறுதிச் சுற்று வரை முன்னேறிய கில்மிஷாவுக்கு வடக்கு - கிழக்கு தமிழர் தாயக பகுதிகளிலும், தென்னிந்தியாவிலும், உலகெங்கிலும் வாழும் தமிழர்களிடத்திலும் ஆதரவு அதிகரித்திருந்தது.

அத்துடன், இறுதிச் சுற்றில் கில்மிஷா வெற்றிப் பெற வேண்டும் என்ற தமது அவாவை தமிழ் மக்கள் தங்களது சமூக ஊடங்கள் மூலம் வெளிப்படுத்தியிருந்தனர்.

இதற்கு முன்னர் தென்னிந்திய தமிழ் ஊடகங்களில் நடத்தப்பட்ட பல போட்டி நிகழ்ச்சிகளில் இலங்கை தமிழர்கள் பங்கு பற்றியிருந்த போதிலும், ஒருசிலர் இறதிப் போட்டி வரை வந்திருந்த போதிலும் வெற்றிப்பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் கிடைத்ததில்லை என்பதுடன் வெற்றிப்பெற்றதுமில்லை.

இது தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்டு இருந்தன.

எனினும், முதன்முறையாக தென்னிந்திய தமிழ் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட பாடல் போட்டி நிகழ்ச்சியில் இலங்கையைச் சேர்ந்த கில்மிஷா வெற்றிவாகை சூடியுள்ளார்.

இதற்கு இலங்கையில் இருக்கும் பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை, இலங்கையின் சிங்கள மற்றும் ஆங்கில, தமிழ் ஊடகங்கள் அனைத்திலும் கில்மிஷாவின் வெற்றி தொடர்பான செய்திகளும் வாழ்த்துக்களும் முதன்மை இடத்தைப் பிடித்திருந்தன.

குறிப்பாக சிங்கள ஊடகங்களிலும் கில்மிஷாவின் வெற்றி தொடர்பான செய்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது