அமெரிக்காவில் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் சபாநாயகர் பதவி நீக்கம்

அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் சபாநாயகர் ஒருவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் குடியரசுக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வலதுசாரி கிளர்ச்சி உறுப்பினர்கள் கெவின் மெக்கார்த்தியை பதவியில் இருந்து அகற்றியுள்ளனர்.  

அமெரிக்க அரச நிறுவனங்களுக்கு நிதி அளிப்பது தொடர்பாக செனட் சபையின் ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி உடன்படிக்கையை எட்டியிருந்தார்.

இதனால் அதிருப்தி அடைந்த தீவிர வலதுசாரி குடியரசுக் கட்சியினர் கெவின் மெக்கார்த்திக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்திருந்தனர்.

இதனையடுத்து அரிதான இந்த வாக்கெடுப்பில் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பதவியில் இருந்து கெவின் மெக்கார்த்தி நீக்கப்பட்டுள்ளார்.

குடியரசு கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் மற்றும் தீவிர வலதுசாரி உறுப்பினர்களின் தொடர்ச்சியான சவால்கள் காரணமாக அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கெவின் மெக்கார்த்தியை பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணைக்கு 216 உறுப்பினர்கள் ஆதரவு வழங்கியுள்ளதுடன், 210 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ளனர்.

அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக சபாநாயகர் ஒருவர் வாக்கெடுப்பொன்றின் மூலம் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

முக்கியமான இடத்தில் நிலைப்பாட்டை எடுக்க தவறிவிட்டார் என இந்த பதவி நீக்க பிரேரணையை முன்வைத்த தீவிர வலதுசாரி காங்கிரஸ் உறுப்பினரான Matt Gaetz குறிப்பிட்டுள்ளார்.

முன் எப்போதும் இல்லாத வகையில் நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பு குடியரசு கட்சிக்குள் கொந்தளிப்பு அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டுவதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கெவின் மெக்கார்த்தி, கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பதவிக்கு நியமிக்கப்பட்டதில் இருந்து தீவிர வலதுசாரியினர் அவருடன் முரண்பட்டே வந்திருந்தனர்.

எனினும் கெவின் மெக்கார்த்தியை தொடர்ந்து புதிய சபாநாயராக தெரிவுசெய்யக் கூடிய ஒருவர் தொடர்பாக தெளிவான முடிவு குடியரசு கட்சியினருக்குள் இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.