“சுகாதார அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்” : வலுக்கிறது கடும் எதிர்ப்பு



சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை உடனடியாக பாராளுமன்றத்தில் கொண்டுவருவதற்கான முயற்சிகளை எதிர்க்கட்சிகள் மேற்கொண்டுள்ளன.

தரமற்ற மருந்துகளை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நாட்டுக்கு கொண்டுவருவதற்காக பல சந்தர்ப்பங்களில் அனுமதியை வழங்கியுள்ளதாக அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக சுமத்திவரும் நிலையில், பேராதனை போதான வைத்தியசாலையில் சர்ச்சைக்குரிய வகையில் உயிரிழந்த சாமோதி சந்தீபனியின் மரணத்தின் பின்னர் அமைச்சர் கெஹெலியவுக்கு எதிரான கருத்துகள் வலுப்பெற்றுள்ளன.

அமைச்சர் கெஹெலிய உடனடியாக தமது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய வேண்டுமென எதிர்க்கட்சிகள் ஒருபுறம் போர்க்கொடி உயர்த்தியுள்ளதுடன், மறுபுறம் சுகாதாரத்துறை ஊழியர்களும் கடும் எதிர்ப்புகளை வெளியிட்டு வருகின்றன.

நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடுகளுக்கு உடனடியாக உரிய தீர்வுகளை வழங்க வேண்டுமென அகில இலங்கை தாதியர் சங்கத்தினர் இன்றுமுதல் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

போராட்டம் குறித்து அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பி.மெதவத்த கருத்து வெளியிடுகையில்,

”அப்பாவி நோயார்களின் உயிர்களையும் சுகாதாரத்துறை ஊழியர்களையும் பாதுகாக்க வேண்டுமென்பதற்காக நாம் பாதையில் இறங்கியுள்ளோம்.

கொழும்பு தேசிய வைத்தியசாலை, சிலாபம், மாத்தறை உட்பட நாடு முழுவதும் உள்ள பல தெரிவுசெய்யப்பட்ட வைத்தியசாலைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். உடனடியாக வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படும் மருந்துகளைின் தரத்தை உறுதிப்படுத்த வேண்டும்” எனக் கூறினார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹரித் அழுத்கே இன்று கொழும்பில் நடத்திய ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிடுகையில்,

“மக்களின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ள எவருக்கும் குழுக்களை நியமிக்க முடியும். ஆனால், அவ்வாறு நியமிக்கப்படும் குழுக்களுக்கு என்ன நடக்கிறதென தெரியவில்லை. அந்த குழுக்களின் அறிக்கையும் வெற்று காகிதங்களாகவே உள்ளன. சுகாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு பொறுப்பானவர்கள் பதிலளித்தே ஆகவேண்டும்” என்றார்.

இதேவேளை, இன்றைய தினம் முதல் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவது குறித்து சகல கட்சிகளுக்கும் தெளிவுப்படுத்த உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

நாளை தினம் பாராளுமன்றத்தில் இந்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் விலக்கமளிக்க உள்ளதுடன், நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து ஏனைய எதிர்க்கட்சிகளுடனும் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.

”இத்தருணத்தில் சுகாதார அமைச்சின் மீது மாத்திரமல்ல அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையும் மக்கள் மத்தியில் வீழ்ச்சியடைந்துள்ளது. அரசாங்கத்துக்குள் பல்வேறு  நெருக்கடிகளும் உள்ளன. நம்பிக்கையில்லாப் பிரேரணை ஊடாக அரசாங்கத்தை வலுப்படுத்தும் வேலையில் எதிர்க்கட்சிகள் ஈடுபடக் கூடாது.

இறுதியாக பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில்கூட 60  மேலதிக வாக்குகளால் அரசாங்கம் வெற்றிக்கண்டிருந்தது. ஆகவே, உரிய ஏற்பாடுகளின்றி சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கட்சி கொண்டுவரக் கூடாது” என புதிய ஹெல உருமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, இன்று கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலக அனுமதித்தது போன்று கெஹெலியவையும் விலக அனுமதியளிக்க மாட்டோம். எத்தகையை நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை கொண்டுவந்தாலும் அவற்றை உறுதியாக தோற்கடிப்போம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கூறியிருந்தார்.

இந்தப் பின்புலத்தில் வைத்தியசாலைகளில் மருந்துகள் குறித்து நிலவிவரும் பிரச்சினைகள் குறித்து கண்டறிவதற்காக ஐவர் அடங்கிய விசேட குழுவொன்றை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நியமித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.