மெல்ல மெல்ல வெளிவரும் உண்மைகள்..! பத்மே விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்

தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்கள(CID) தடுப்புக் காவலில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் கெஹெல்பத்தர பத்மே, கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு, மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

விசாரணையின் போது, கணேமுல்ல சஞ்சீவ மற்றும் கம்பஹா பஸ் பொட்டா ஆகியோரை கொலை செய்வதற்கு தானே திட்டமிட்டதாக அவர் ஒப்புக்கொண்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், கம்பஹா ஒஸ்மன் மீதான கொலை முயற்சியில் நேரடி காரணம் தனக்கு இல்லையெனவும், தம்மிட்ட அவிஷ்க மற்றும் கமாண்டோ சலிந்த ஆகியோரின் கோரிக்கையின் பேரில் ஒத்துழைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொக்கேய்ன், ஹெரோயின், ஐஸ், குஷ் மற்றும் கேரள கஞ்சா உள்ளிட்ட நாட்டில் பரவலாக உள்ள அனைத்து போதைப்பொருட்களையும் தாம் விற்றதாக பத்மே ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும், தமது கைபேசியில், "கொக்கேய்ன்" ஐ குறியீட்டு பெயராக பயன்படுத்தியதையும், அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்துடன், தன்னிடம் இருந்த அனைத்து துப்பாக்கிகளையும் பொலிஸார் ஏற்கனவே மீட்டுள்ளதாகவும், தற்போது தன்னிடம் இன்னும் ஒரு துப்பாக்கி மட்டுமே மீதமுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும், அவர் கூறியுள்ளார்.