கட்டுநாயக்க விமான நிலையம் செல்பவர்களுக்கு நெருக்கடி - மாபியா குழுவின் அட்டகாசம்

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் மாபியா குப்பலின் அட்டகாசத்தால் அதிகளவானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டி சாரதிகளின் அச்சுறுத்தல் காரணமாக கட்டுநாயக்கவில் இருந்து வரும் பேருந்துகள் விமான நிலையத்திற்குள் நுழையாததால் மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

சுமார் 6 மாதங்களாக விமான நிலையத்திற்கு பேருந்துகள் வரவிடாமல் தடுக்கப்பட்டதாக விமான பயணிகள் தெரிவித்துள்ளனர்.

விமான நிலையத்தின் பிரதான நுழைவாயில் அருகே பேருந்துகளில் இருந்து இறங்கும் விமான நிலைய ஊழியர்களும் பயணிகளும் சுமார் ஐநூறு மீட்டர் தூரம் நடக்க வேண்டிய நிலையம் ஏற்பட்டுள்ளது.

இலங்கைக்குத் திரும்பும் மக்களும், விமான நிலையச் சேவைகளுக்குச் செல்பவர்களும் எவரிவத்தை பகுதியிலுள்ள பிரதான பேருந்து நிலையத்திற்குச் செல்ல ஒரு கிலோமீற்றர் தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது.

இல்லையேல் முச்சக்கர வண்டியில் பயணிக்க வேண்டும். முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு நிலையான கட்டணங்கள் இல்லை எனவும் அவர்கள் நினைத்தால் எவ்வளவு தொகையை வசூலிப்பார்கள் என்றே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பல மாதங்களாக எந்தவொரு அரச உயர் அதிகாரியும் இது தொடர்பில் கவனம் செலுத்தாத காரணத்தினால் மக்கள் இந்த அடக்குமுறைக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.