'நாங்கள் என்ன பிச்சை எடுக்கப்போறோமா?.. " பிரிட்டனின் தடை குறித்து கருணா ஆதங்கம்


கிழக்கு தமிழ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதையடுத்து எனக்கு பிரித்தானிய அரசாங்கம் தடை விதித்தமை ஒரு அரசியல் நாடகம் என்று முன்னாள் பிரதி அமைச்சரான கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

அண்மையில் பிரித்தானியா அரசாங்கம் எனக்கு தடை விதித்தது. நாங்கள் என்ன பிச்சை எடுக்கப்போறோமா? இவ்வளவு நாளும் இல்லாத தடை எதற்காக இப்போது விதிக்கின்றனர்? இது ஒரு அரசியலுக்கான நாடகம் தான்.

பிரித்தானிய அரசாங்கத்தால் நான் 2006 இல் கைது செய்யப்பட்டு அங்கு சிறைச்சாலையில் 8 மாதங்கள் இருந்தேன். அப்போது கண்டுபிடிக்காத குற்றச்சாட்டை இப்போதுதான் கண்டுபிடித்தார்களா? பிரித்தானியஅரசாங்கம் அந்த நேரம் அதனைக் கண்டுபிடித்து கையில் விலங்கை போட்டு கொண்டுச் சென்றிருக்கலாம்.

ஆனால், அரச மரியாதையுடன் கட்டுநாயக்க விமான நிலையம் வரை என்னைபாதுகாப்புடன் கொண்டு வந்தார்கள். அப்படிப்பட்ட பிரித்தானிய அரசாங்கத்துக்கு, இப்பத்தான் கருணா பிழை விட்டுள்ளார் என்று தெரிகிறது என்றார்

 தற்போது கிழக்கு தமிழ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பிறகு இதனை பொறுத்துக்கொள்ள முடியாத பலர் கலக்கமடைந்துள்ளதுடன் இவ்வளவு காலமும் இல்லாத எதிர்ப்பு உருவாகி கொதித்துக்கொள்கின்றனர்.

புலம்பெயர்ந்து வாழ்கின்ற படித்தவர்கள்,புத்திஜீவிகள், வர்த்தகர்கள் சிந்திப்பதில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பை முதலில் தோற்கடிக்க வேண்டும். அவர்கள் போலி தேசியத்தை பேசிக்கொண்டு மக்களை ஏமாற்றி இலஞ்சம் ஊழல் எல்லாவற்றையும் செய்கின்றனர்.

ஆகவே, கிழக்கு மாகாண சபையை தவறவிடுவோமாக இருந்தால் முஸ்லிம்தலைவர்களுடைய ஆதிக்கம் வளர்ச்சியடைந்து தமிழர்களுடைய நிலப் பிரதேசங்கள் அபகரிக்கப்பட்டு இருப்பே கேள்விக்குறியாகும் என்றார்.