''உடலுறவு கொள்ளவில்லை'' நிர்வாண நிலையில் மீட்கப்பட்ட பாடசாலை மாணவியின் சடலம்! பிரதான சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலம்

களுத்துறை பிரதேசத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் காவல்துறையினருக்கு அளித்த வாக்குமூலம் தற்போது வெளியாகியுள்ளது.

நேற்றைய தினம் (09) செனிகம கோவிலுக்கும் ஹிக்கடுவ காவல் நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்து பிரதான சந்தேகநபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை இசுரு உயனே பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய தனுஷ்க கயான் சஹபந்து என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் அம்பலாங்கொட பிரதேசத்தில் இருப்பதாகவும், வாடகை அடிப்படையில் கார் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக நேற்று அதிகாலை அப்பகுதிக்கு வருவார் எனவும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதன் பிரகாரம், காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் முகவர் போன்று வேடமணிந்து அம்பலாங்கொடை பிரதேசத்திற்கு காரை வழங்குவதற்காக சென்று சந்தேகநபர் பல சந்தர்ப்பங்களில் வெவ்வேறு இடங்களுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

இதன்பின்னர் அவரை அம்பலாங்கொடை பகுதியில் வைத்து காரில் ஏற்றிய, சாரதி போன்று உடையணிந்த காவல்துறை உத்தியோகத்தர் சந்தேகநபரை கவனமாக சேனிகம கோவிலுக்கும் ஹிக்கடுவ காவல் நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதிக்கு அழைத்துச்சென்றுள்ளார்.

இதன்போது விரைந்து செயற்பட்ட களுத்துறை தெற்கு காவல்துறை குற்றப்பிரிவின் நிலைய கட்டளைத் தளபதி உள்ளிட்ட குழுவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்படும் போது அவரிடமிருந்து 95,000 ரூபா பணத்தையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதனை தொடர்ந்து சந்தேகநபர் களுத்துறை தெற்கு காவல்துறையினரிடம் அழைத்துச் செல்லப்பட்டு வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண்ணின் காதலன் ஊடாக குறித்த பாடசாலை மாணவியை தாம் அடையாளம் கண்டதாகவும் சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும், இந்த சம்பவத்திற்கு முன்னர் தாம் குறித்த மாணவியை சந்தித்ததில்லை எனவும், அவருடன் எவ்வித தொடர்பும் கொண்டிருக்கவில்லை எனவும் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை தாம் உட்பட நால்வரும் குறித்த விடுதிக்கு சென்று மது அருந்தியதாகவும் அவர் அளித்த வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஏனைய தம்பதியினர் விடுதியை விட்டு வெளியேறிய பின்னர், தானும் மாணவியும் அறையில் இருந்ததாகவும், ஆனால் உடலுறவு கொள்ளவில்லை என்றும் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனிடையே, மாணவியின் கையடக்கத்தொலைபேசியில் வந்த அழைப்புக்கு, ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி பதிலளித்ததாகவும் சந்தேகநபர் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, மாணவி அறையின் ஜன்னல் அருகே இருந்த நாற்காலியில் ஏறி ஜன்னல் வழியாக குதித்து தற்கொலை செய்துக்கொண்டமையினால், பயந்து அந்த இடத்தை விட்டு ஓடியதாகவும் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தப்பிச்சென்று சந்தேகநபர் ஹொரணை பிரதேசத்தில் உள்ள தனது விவாகரத்து பெற்ற மனைவியின் வீட்டில் தங்கியிருந்து பின்னர் வேறொரு விடுதிக்கு சென்று சில மணித்தியாலங்கள் தங்கியிருந்ததாகவும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


களுத்துறை மாணவி மரணம் - ஹோட்டல்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடுமையான அறிவுறுத்தல்! 

களுத்துறையில் இடம்பெற்ற மாணவியின் மரணம் போன்ற அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதற்கு ஒழுங்கற்ற மற்றும் பொறுப்பற்ற விதத்தில் நடத்தப்படும் ஹோட்டல்களும் காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனை, அகில இலங்கை சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் உப தலைவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்றின் பின்னர், நாட்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலர் முகக் கவசம் அணிந்துள்ளதாகவும், அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் அகில இலங்கை சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர்,

"ஆகவே, முகக் கவசம் அணிந்து வரும் நபர்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு ஹோட்டல் மற்றும் சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரதும் பொறுப்பு.

களுத்துறை மாணவியின் மரணம் சுற்றுலாத் துறைக்கும், ஹோட்டல் துறைக்கும் பெரும் கலங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹோட்டல் மற்றும் சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரும் தொழில்துறையின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால வாழ்விற்காக மிகவும் அவதானத்துடன் செயல்பட வேண்டும்.

ஒழுங்கற்ற மற்றும் பொறுப்பற்ற விதத்தில் செயல்படும் ஹோட்டல்களுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

அதற்கு தமது சங்கத்தின் அதிகபட்ச ஆதரவு வழங்கப்படும்." என துணைத் தலைவர் வல்கே மேலும் கூறியுள்ளார்.



களுத்துறை சிறுமியின் மரண விசாரணை - நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு..!  

களுத்துறையில் 16 வயது யுவதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய 29 வயதான பிரதான சந்தேகநபரை 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை நடத்த காவல்துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

களுத்துறை விடுதி ஒன்றின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் இன்று (10) களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதேவேளை, உயிரிழந்த யுவதியின் கையடக்க தொலைபேசிக்கு வந்த அழைப்புகள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து குறித்த யுவதி தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்ததாக விசாரணைகளை முன்னெடுக்கும் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தன்னுடன் இருந்த போது அவருக்கு பல தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும் அதன் பின்னர் அவர் அந்த விபரீத முடிவை எடுத்ததாகவும் சந்தேக நபர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், சந்தேகநபரின் வாக்குமூலத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.