இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மாற்றப்படும் கச்சதீவு - தமிழரின் நம்பிக்கையை இழக்கும் இந்தியா!


தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதாக கூறிவரும் சிறிலங்கா அரசாங்கம், மறுபுறம் தமிழர் தாயகப் பகுதியை பௌத்த மயமாக்கும் செயற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டுவருவதாக ஈ.பி.ஆர்.எல்.ஏப் குற்றஞ்சாட்டியுள்ளது.

கச்சதீவில் புதிததாக புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளமை குறித்து ஐ.பி.சி தமிழுக்கு கருத்து வெளியிட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்த விடயத்தில் இந்தியா உடனடியாக தலையிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

நாட்டை ஆளும் சிங்கள அரசாங்கத்தின் முக்கிய நோக்கம், வடக்கு மாகாணத்தை பௌத்தமயமாக்குவது மட்டுமல்ல மதவெறியின் அதிஉச்சக்கட்டமாகவே நாம் இதனைப் பார்க்கின்றோம்.

அதுமட்டுமன்றி கச்சதீவு என்பது இந்தியாவிற்கு மிக அருகில் இருக்கும் தீவு, இந்த தீவு தற்போது சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டுப்பட்டில் இருந்தாலும் முன்னொரு காலத்தில் இந்தியாவால் சிறிலங்காவிற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட தீவு என்பதை மறந்துவிடக் கூடாது.

இவ்வாறான நிலையில் கச்சதீவில் தற்போது புத்தர் சிலை வைத்திருப்பதானது, எதிர்காலத்தில் இந்தியாவிற்கு பாரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்  தீவாகக்கூட மாற்றப்படலாம்.

ஆகவே இதனை இந்தியா, ஆரம்பத்திலேயே வன்மையாக கண்டிக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் இந்த விடயம் தொடர்பில் கண்டும் காணாதது போல் இருந்தால் சிறிலங்கா அரசாங்கம் தான் விரும்பும் அனைத்தையும் சுலபமாக மேற்கொள்ளும் சூழ்நிலை ஏற்படும்.

ஏற்கனவே வடக்கில் பெரும்பாலான பகுதிகளில் பௌத்தமயமாக்கல் தீவிரமாக இடம்பெற்று வருகின்றமையை வெளிப்படையாக காணக் கூடியவாறு இருக்கின்றது.

அதுமட்டுமன்றி கொழும்பில் இருக்கின்ற சீனத்தூதரகம், வடக்கு மாகாணத்தில் பல்வேறுபட்ட விடயங்களை மேற்கொண்டு வருகின்றது. அதில் இந்தியாவிற்கு குந்தகமான பல விடயங்கள் இருக்கின்றன.

இவ்வாறான பின்னணியில் கச்சதீவிலும் புத்தர் கோயில் அமைப்பது என்பது, இந்தியாவிற்கு பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதோடு, இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

இந்தியா இதனை மிக அவதானமாக கையாள்வதோடு, இதனை மிகுந்த கவனத்தில் எடுக்க வேண்டும். அதேபோல் தான் கடந்த இரண்டு வாரமாக நெடுந்தீவிலும் புதிய பௌத்தமயமாக்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதாவது, நெடுந்தீவு வெடியரன் கோட்டையை தற்போது பௌத்த புராதன அடையாளமாக பிரகடனப்படுத்தி அங்கும் பௌத்த கோயில் ஒன்றை நிறுவுவதற்கு சிறிலங்கா கடற்படை முழு மூச்சுடன் செயற்பட்டு வருகின்றது.

ஆகவே இவ்வாறான மோசமான நடவடிக்கைகள் அனைத்தையும் சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என இந்தியா மிகுந்த கண்டிப்பான வலியுறுத்தலை விடுக்க வேண்டும்.

அவ்வாறு இல்லாது போனால், ஈழத் தமிழ் மக்களின் நம்பிக்கையை இந்தியா இழக்கும் நிலை ஏற்படும்” எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கச்சதீவு, சிறிலங்காவிற்கு அப்போதைய இந்திய பிரதமர் இந்திராகாந்தியால் கையளிக்கப்பட்ட பொழுது, இலங்கை மற்றும் இந்திய கடற்றொழிலாளர்கள் பயன்படுத்தல், வலை காய விடுதல் மற்றும் ஓய்வெடுத்தல் போன்ற விடயங்களும் உள்ளடக்கப்பட்டதுடன் அங்கிருக்கும் அந்தோனியார் ஆலயத்திற்கு வருடம் ஒருமுறை திருவிழா நடத்துவது போன்ற ஒப்பந்தங்கள் குறிப்பிடப்பட்டு கைச்சாத்தானது.

அந்த ஆலயத்தின் திருவிழாவினை யாழ்ப்பாணம், பங்கு தந்தையர்கள் தலைமை தாங்கி நடத்துவதுடன் இலங்கையின் வடமாகாணம் மற்றும் தமிழகத்திலிருந்தும் மக்கள் பங்கேற்று வரும் நிலையில் இந்த முறை இடம்பெற்ற திருவிழாவில் என்றும் இல்லாதவாறு பௌத்த பிக்குக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இவ்வாறாக சிங்களவர்கள் வாழாத அல்லது செல்லாத கச்சத்தீவில் பௌத்த விகாரை கட்டப்படுவதானது வடக்கு கிழக்கில் மிக விரைவாக பௌத்தத்தினை பரப்புவதற்கான ஏற்பாடாகவுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளிற்கு இந்தியா வெறும் பார்வைர்வையாளராக இருக்குமாயின் எதிர்காலத்தின் கச்சத்தீவின் மூலம் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாது என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

95 சதவிகிதமாக தமிழர் வாழும் வடக்கு மாகாணத்தில் சிங்கள மக்களை குடியமர்த்துவது மற்றும் பௌத்த விகாரைகளை அமைப்பது போன்ற விடயங்களை கட்டுப்படுத்த இந்தியா முழு மூச்சுடன் செயற்பட வேண்டும்.

தற்போது வரையான இந்தியாவின் மௌனம், இந்தியா அனைத்து விடயங்களிலும் பாராமுகமாக இருக்கின்றதா என்ற கேள்வி ஈழத் தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது.