பெருந் தோட்டப் பகுதியில் 54 தொழிற்சாலைகளைத் தீக்கிரையாக்கிய ஜே.வி.பி.

உங்கள் கட்சி 54 தொழிற்சாலைகளை எரித்தமைக்கு மன்னிப்பு கோருமா என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடளுமன்றத்தின் நேற்றைய(14.03.2025) பெருந்தோட்ட அமைச்சு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய அமர்வின் போது, மலையகத்தை இதுவரை பிரதிநிதித்துவப்படுத்திய மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் மலையக மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் நாடளுமன்ற உறுப்பினர் கலைச்செல்வி தெரிவித்திருந்தார்.

 இதற்கு, பதிலளித்த ஜீவன் தொண்டமான், மலையக மக்கள் பிரதிநிதிகள் எதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

அத்துடன், இந்திய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் இணைந்து இரண்டு இலட்சத்து இருபத்தோராயிரம் மலையக மக்களை நாடு கடத்தியதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அதற்கு யார் மன்னிப்பு கேட்க போகிறார்கள் என அவர் கேள்வி எழுப்பினார். மேலும், எங்களுடைய சமூகத்தை நாடற்ற சமூகமாக மாற்றியமைக்கு யார் மன்னிப்பு கேட்க போகிறார்கள் என அவர் வினவினார்.