யாழிற்கு திடீர் பயணம் மேற்கொண்ட வசந்த முதலிகேவை திணறடித்த ஊடகவியலாளர்கள்!


யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் வசந்த முதலிகே, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க முடியாது திணறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் மூலம் தமிழர்களும் முஸ்லிம்களும் பாதிக்கப்படும் போது ஏன் எதிர்த்து குரல் கொடுக்கவில்லையெ ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போதே அதற்கு அவர் பதிலளிக்காது மௌனம் காத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழுவினர் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு திடீரென பயணம் மேற்கொண்டிருந்தனர்.

அதனையடுத்து, நேற்று காலை 11 மணியளவில், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பிரதி நிதிகளுக்கும், யாழ் பல்கலைக்கழகம் மாணவர் ஒன்றிய பிரதிகளுக்கும் இடையிலான சந்திப்பு யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.

சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, பயங்கரவாத தடைச் சட்டம் இந்த நாட்டில் இருந்து முற்றாக நீக்கப்பட வேண்டும் அதனை நீக்குவதற்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றாக இணைந்து தொடர் போராட்டம் ஒன்றை நடத்த வேண்டும் என வசந்த முதலிகே தெரிவித்தார்.

இதன் போது, சிறுபான்மையினர் மீது பாய்ந்த அடக்கு முறைக்கு ஏன் குரல் கொடுக்கவில்லையென ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கே அவர் பதிலளிக்க முடியாது மௌனம் காத்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிவில் செயற்பாட்டாளர்கள் மருத்துவர்கள் கைது செய்யப்பட்டபோது ஏன் மௌனம் காத்தீர்கள் எனவும்,  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் பல முஸ்லிம்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட போதும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏன் குரல் கொடுக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பப்பட்டது.

இருப்பினும் ஊடகவியலாளர்களின் இந்த கேள்விகளுக்கு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் வசந்த முதலிகே எந்தப் பதிலும் வழங்காமல் மொளனம் காத்தார்.

பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வசந்த முதலிகே,

வடக்கு மக்களுடைய பிரச்சினைகளை நன்கு அறிவதாகவும் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கு தாங்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் மற்றும் 13வது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்க வேண்டுமென கூறியதுடன் வடக்கு பல்கலைக்கழகம் மாணவர்களும் தம்முடன் இணைந்து குரல் கொடுக்க முன்வருமாறும் அழைப்பை விடுத்துச் சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.