ஜோ பைடன் ரஷ்யாவிற்குள் நுழைய தடை-விளாடிமிர் புடின் போர்க்குற்றவாளி என தீர்மானம்!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஷ்யாவிற்குள் நுழைய அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது.உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் அமெரிக்கா, ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது.இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஷ்யாவும் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், வெளியுறவுத் துறை அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர், கூட்டு இராணுவ தளபதிகளின் தலைவர் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள் மற்றும் பிரமுகர்கள் ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.அதே நேரம் அமெரிக்கா உடனான அதிகாரப்பூர்வ தொடர்பு நீடிக்கும் எனவும் விளக்கமளித்துள்ளது.இதனிடையே ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஒரு போர்க்குற்றவாளி என அமெரிக்க நாடாளுமன்றம் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.இந்தத் தீர்மானத்தை குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லிண்ட்ஸே கிரஹாம் முன்மொழிந்தார். இதனை குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் அனைவருமே ஆதரித்துள்ளனர்.இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் ஏனைய நாடுகள் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர்க் குற்றங்கள் குறித்த விசாரணையை முன்னெடுக்க உதவும்.உக்ரைன் நேட்டோ அமைப்புடன் இணைந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 24ம் திகதி முதல் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து வருகின்றது என்பதுக் குறிப்பிடத்தக்கது.