யாழ் போதனா வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படும்- ஜனாதிபதி ரணில் யாழில் உறுதி...!யாழ் போதனா வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்திற்கான மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(24)  காலை யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.

உலங்கு வானூர்தி மூலம்  யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் வந்திறங்கிய ஜனாதிபதியை, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் வரவேற்றனர்.

இந்நிலையில்,  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக யாழ் நகரில் புதிதாகக் கட்டப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதி கட்டிடங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திறந்து வைத்தார்.

இதன்பின்னர் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, யாழ் வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படும் எனவும் இதன்மூலம் வடக்கில் சிறந்த சுகாதார கட்டமைப்பை உறுதிப்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.


இதேநேரம்  நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் புதிய கட்டடம் திறந்து வைத்தமையை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று 24.05.2024 காலை 10.30 மணியளவில் பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் மருத்துவபீடம் மற்றும் பல்கலைக்கழக பிரதான வளாக வாயிலில் கறுப்புக் கொடிகளைப் பறக்கவிட்டிருந்தனர்.