ரணிலுக்கு எதிரான யாழ் போராட்டம் - காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினருக்கு கொலை அச்சுறுத்தல்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதோடு, வீட்டின் மீது தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் வவுனியா மாவட்ட செயலாளர் சிவானந்தன் ஜெனிதாவின் வீட்டின் மீதே இன்று அதிகாலை 3.30 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கழிவு ஓயில் மற்றும் போத்தல்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் இதற்கு முன்னரும் தொடர்ச்சியாக தொலைபேசி மூலமாக அழைப்பெடுத்து  அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல் நிலையத்திலும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் அவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,  

கடந்த 15 ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தன்று அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் யாழ் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நல்லூரில் போராட்டம் இடம்பெற்றது. அந்த அமைதிவழி போராட்டத்தை காவல்துறையினர் அடக்க முற்பட்டு பொதுமக்கள் மீது அத்துமீறி நடந்து கொண்டனர்.

அதனையடுத்து குறித்த போராட்டத்தில் கலந்துகொண்ட தவத்திரு வேலன் சுவாமிகள் அண்மையில் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

அதேவைளை போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை காவல்துறையினர் விசாரித்து அச்சுறுத்தியிருந்தனர். இந்த நிலையிலேயே குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.