மாவீரர் நாளுக்கு தயாராகும் யாழ் துயிலும் இல்லங்கள் - இராணுவ அச்சுறுத்தலால் தர்க்கம்


யாழ்ப்பாணம் - உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லம் இன்றைய தினம் சிரமதான பணிகள் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.

துப்பரவு செய்யப்பட்ட துயிலும் இல்லத்தில் மீட்கப்பட்ட சிதைவுகளுக்கு முன்பாக சுடரேற்றி மலரஞ்சலியும் செய்யப்பட்டது.

மாவீரர் வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில் வடக்கு கிழக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் சிரமதான பணிகள் மூலம் துப்பரவு செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாகவுள்ள வீதியை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் நேற்று சிரமதானம் செய்ய முற்பட்ட போது சிறிலங்கா இராணுவத்தினரால் இடையூறு ஏற்படுத்தப்பட்டது.

இதனால் இராணுவத்தினருக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்குமிடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டிருந்தது.

இடையூறு ஏற்படுத்திய சிறிலங்கா இராணுவத்தினர் தாம் அந்த வீதியை சிரமதானம் செய்யவுள்ளதாகவும், அங்கு பௌத்த கொடியை நாட்டவுள்ளதாகவும் கூறினார்கள்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையில் குழப்பமான சூழல் ஏற்பட்டதைத் தொடர்ந்து இராணுவத்தினரால் தமிழ் தேசிய மக்கள் முன்னணின் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் புகைப்படம் எடுக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டனர்.

எனினும் சில மணி நேரத்தின் பின்னர் இராணுவத்தினர் அங்கிருந்து விலகிச் சென்றதைத் தொடர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் சிரமதானங்களை மேற்கொண்டதுடன் அங்கு சிவப்பு மஞ்சள் கொடிகளையும் பறக்கவிட்டமை குறிப்பிடத்தக்கது.