யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மாபெரும் போதை விருந்து!

யாழ்.நகர் பகுதியில் அமைந்துள்ள பிரபல விடுதியில் கடந்த 4 ஆம் திகதி இரவு "DJ night" எனும் பெயரில் போதை விருந்து கொண்டாட்டம் ஒன்று இடம்பெற்ற விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொழும்பை சேர்ந்த நிறுவனத்தின் பெயரில் சிலர் , சமூக வலைத்தளங்களின் ஊடாக பார்ட்டிக்கு அழைப்பு விடுத்து இருந்தனர்.

ஆண்களுக்கு நுழைவு சீட்டு 1500 ரூபாய்க்கும் அவர்களுடன் வரும் பெண்களுக்கு 1000 ரூபாய் என விளம்பரம் செய்து தொலைபேசி இலக்கம் ஊடாக தொடர்பு கொள்ளுமாறும் கோரி இருந்தனர்.

அதன் அடிப்படையில் அன்றைய தினம் பல இளையோர் நுழைவு சீட்டுக்களை பெற்று தமது பெண் நண்பிகளுடன் கொண்டாட்டத்திற்கு சென்று இருந்தனர்.

முன்னதாக DJ இசையுடன் ஆரம்பித்த கொண்டாட்டம் பின்னர் மது விருந்துடன் நிகழ்வு சூடு பிடிக்க தொடங்கியது.

அதனை தொடர்ந்து அங்கு வந்த சிலர் மது போதை தலைக்கு ஏற தாம் கொண்டு வந்திருந்த கஞ்சா , ஐஸ் போன்ற போதை பொருளையும் நுகர தொடங்கி கடும் போதையில் ஆட்டம் போட்டுள்ளனர்.

ஹோட்டலில் மதுபானம் மாத்திரமே வழங்க பட்டதாகவும், ஆனாலும் அங்கு வந்த பலரும் தம் வசம் உயிர்கொல்லி போதைப்பொருளை வைத்திருந்ததாக விருந்தில் கலந்து கொண்ட சிலர் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் இவ்வாறான கலாசாச்சர சீரழிவு நிகழ்வுக்கு குறித்த விடுதி துணை போனமை தொடர்பில் பலரும் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை தென்பகுதிகளில் சமூக வலைத்தளங்கள் ஊடாக இவ்வாறான போதை விருந்துக்கு அழைப்பு விடுப்பவர்களுக்கு எதிராகவும், விருந்து கலந்து கொண்டவர்களுக்கு எதிராகவும் காவல்துறையினர் சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்நிலையிலையே தற்போது , யாழ்ப்பாணத்தில் அவ்வாறான விருந்து கொண்டாட்டத்தை தெற்கை சேர்ந்தவர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர் எனவும். இவ்வாறானவர்களுக்கு எதிராக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.