யாழ். மத்திய கல்லூரி அதிபர் நியமன விவகாரம்! பின்னணியில் செயற்படும் அமைச்சர்

யாழ். மத்திய கல்லூரி அதிபர் நியமனத்தில் அமைச்சரின் தேவையற்ற அரசியல் தலையீடு காணப்படுவது, வடக்கு கல்வி கட்டமைப்புக்கு கரிநாள் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக மையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

வடக்கு கல்வி கட்டமைப்புக்கு கரிநாளாக நான் பார்க்கிறேன். யாழ் மத்திய கல்லூரி அதிபர் நியமனம் தொடர்பில் சர்ச்சைகள் நிலவி வருகின்றன.

 மத்திய கல்லூரி தேசிய பாடசாலையாகும். அதற்கு அதிபர் நியமனங்கள் பொதுச் சேவை ஆணைக்குழு ஊடாக கல்வி அமைச்சே வழங்கும்.

அதன் அடிப்படையில், புதிய அதிபர் நியமிக்கப்பட்டு அவர் பதவியேற்ற போதிலும், முன்னர் பதில் அதிபராக இருந்தவர் பொறுப்புக்களை கையளிக்காமல் இழுத்தடித்து வருகின்றார்.

புதிய அதிபரை பதவியேற்க விடமால் முன்னர் பதில் அதிபராக இருந்தவரை அதிபர் ஆக்கும் முயற்சியின் பின்னணியில் அமைச்சர் ஒருவர் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிபர் நியமன பொறிமுறைகளை கேள்விக்கு உட்படுத்தும் முகமாக செயற்பாடுகள் நடைபெறுவதுடன், சாதியம் உள்ளிட்ட சில விடயங்களையும் மாணவர்கள் மத்தியில் ஊட்ட முயல்கின்றனர்.

இந்நிலையில், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை, அமைச்சர் பாடசாலைக்கு நேரில் சென்று முன்னர் இருந்த பதில் அதிபரே தொடர்ந்து அதிபாரக கடமையாற்றுவார் என புதிய அதிபருக்கு கடிதம் ஒன்றினை காட்டியுள்ளதாக அறிகிறோம்.

ஒரு அமைச்சர் பாடசாலைக்கு நேரில் சென்று பாடசாலை விடயங்களில் தலையீடு செய்வது விரும்பத்தக்க செயல் இல்லை. கல்வி நடவடிக்கைகளுக்குள் அரசியல் தலையீடுகள் இருக்கு கூடாது என தெரிவித்தார்.