யாழ் மத்திய பேருந்து நிலைய விவகாரம்: அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த டக்ளஸ்

பயணிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் யாழ் மத்திய பேருந்து நிலையம் தொடர்பில் பொது மக்களால் டக்ளஸ் தேவானந்தாவிடம் முறைப்பாடு செய்தமைக்கமைய நேரில் சென்று பணிப்புரை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு இன்று (3.04.2024) திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ். மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் ஆராய்ந்தது கொண்டார்.

முறையான அனுமதி பெறாமலும், பயணிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் விதமாகவும் யாழ் மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் கடைகளை அமைத்துள்ள விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரையை வழங்கியுள்ளார்.

குறிப்பாக மத்திய பேருந்து நிலையத்தில் காணப்படும் பொது மலசலகூடப் பகுதியானது சுகாதாரச் சீர்கேட்டுடன் காணப்படுவதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் பொது மக்களால் அமைச்சருக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த பகுதியை பார்வையிட அங்கு சென்றிருந்தார்.

இந்நிலையில் குறித்த பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள பிரச்சினைகளை பொது மக்களுக்கு அசோகரியம் ஏற்படாத வகையில் நடவடைக்கை மேற்கொள்ளுமாறு துறைசார் தரப்பினருக்கு பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.