இலங்கைத் தமிழரசுக் கட்சியை சீரழிப்பதற்கு சதிவலை பின்னப்பட்டுள்ளதென்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என அக்கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவரும், வடக்கு மாகாண சபைத் தவிசாளருமான சி.வி.கே.சிவஞானம் (C. V. K. Sivagnanam) தெரிவித்துள்ளார்.
கட்சிக்கு எதிராக தொடர்ச்சியாக வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதானது துரதிஷ்டவசமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு எதிராக நான்கு வழக்குகள் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய கட்சி
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இலங்கைத் தமிழரசுக்கட்சி 75ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ள தமிழ் மக்களின் பாரம்பரிய கட்சியாகும்.
தமிழர்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட இக்கட்சியானது தற்போதும் அந்தப் பயணத்தில் தீவிரமாக உள்ளது.
ஆனால் துரதிஷ்டவசமாக கட்சிக்கு எதிராக தொடர்ச்சியாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையான நோக்கமானது, கட்சியை செயற்பாடுகளில் இருந்து ஓரங்கட்டுவதும், கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்துவதுமாகும்.
தமிழரசுக் கட்சி
இதற்கு காரணங்கள் உள்ளன. இலங்கைத் தமிழரசுக் கட்சி தான் தற்போது தமிழ் மக்களின் அதிகளவான பிரதிநிதித்துவங்களை கொண்டுள்ள கட்சியாகும்.
தமிழ்த் தேசியத்தை பலவீனப்படுத்த வேண்டுமெனக் கருதுகின்ற உள்நாட்டு வெளிநாட்டுச் சக்திகள் தமிழரசுக் கட்சியை அரசியல் அரங்கிலிருந்து அகற்றுவதன் மூலம் தான் தங்களின் இலக்கினை அடைய முடியும்.
ஆகவே, இறுதியாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கூட எட்டு ஆசனங்களை வடக்கு - கிழக்கில் வென்றெடுத்து தனது செல்வாக்கை நிரூபித்துள்ள தமிழரசுக் கட்சியை பலவீனப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, கட்சிக்குள் இருப்பவர்களையும், வெளியில் இருப்பவர்களையும் பயன்படுத்தி கட்சியை பலவீனப்படுத்துவதற்கு முனையும் தரப்புக்கள் பாரிய சதிவலையொன்றை பின்னியிருக்கின்றார்கள்.
இந்த விடயத்தை கட்சியின் ஒவ்வொறு உறுப்பினரும் புரிந்து கொள்தல் அவசியமானது. திரைமறைவில் மேற்கொள்ளப்படும் தமிழ்த் தேசிய எதிர்ப்புச் சக்திகளின் சதிவலையை முறியடிப்பதற்கும், கட்சியை சிறப்பாக தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கும் அனைத்து உறுப்பினர்களும் முரண்பாடுகளை களைந்து ஒன்றிணைய வேண்டியது அவசியமாகின்றது” என தெரிவித்துள்ளார்.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            