புட்டினின் நெருங்கிய நண்பரின் மகளை கொன்றது உக்ரைன் தான்!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் நெருங்கிய நண்பரின் மகளை கொன்றது உக்ரைன் சிறப்பு சேவைகள் தான் என்பதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.கடந்த சனிக்கிழமை, ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ அருகே காரை ஓட்டிச் சென்ற 29 வயதான தர்யா டுகினா கார் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.

தர்யா டுகினாவின் தந்தையான புடினுக்கு நெருக்கமான முக்கிய தீவிர தேசியவாதியான அலெக்சாண்டர் டுகின் தாக்குதலின் நோக்கமாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.ஆனால், இந்த அனைத்து குற்றச்சாட்டுக்களையும் மறுத்துள்ள உக்ரைன் அதிகாரிகள், இந்த குண்டுவெடிப்பில் தமக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளனர்.

ஆனால், ரஷ்யாவின் மத்திய பாதுகாப்பு சேவை, நேற்று இந்த வழக்கைத் தீர்த்துவிட்டதாகவும், உக்ரைன் இதற்கு நேரடியாகப் பொறுப்பு என்றும் குற்றஞ்சாட்டியது.உக்ரைனிய சிறப்பு சேவை ஒப்பந்தக்காரரான உக்ரைனியப் பெண் ஒருவர் தனது இளம் மகளுடன் ஜூலை மாதம் ரஷ்யாவிற்குள் நுழைந்ததாகவும், அந்த பெண், டுகினா இருந்த அதே கட்டடத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை ஒரு மாதத்திற்கு வாடகைக்கு எடுத்து தாக்குதலுக்கு திட்டமிட்டதாகவும் ரஷ்யாவின் மத்திய பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த பெண், தாக்குதல் நடத்தப்பட்ட தினத்தன்று ஒரு மினி கூப்பரில் மாஸ்கோ வழியாக டுகினாவைப் பின்தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது. அதற்காக அவர் மூன்று வௌ;வேறு உரிமத் தகடுகளைப் பயன்படுத்தினார்.குண்டு வெடிப்புக்குப் பிறகு சந்தேக நபர் எஸ்டோனியாவுக்குத் தப்பிச் சென்றதாக ரஷ்யாவின் மத்திய பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது.

உக்ரைனின் ஜனாதிபதி ஸெலென்ஸ்கியின் ஆலோசகர், மைக்கைலோ போடோலியாக், ரஷ்யாவின் மத்திய பாதுகாப்பு சேவை ஒரு கற்பனை உலகில் இருப்பதாக கூறினார்.இதன்பிறகு, சந்தேக நபரின் கார் ரஷ்யாவுக்குள் நுழைவதையும், அவர் டுகினாவின் கட்டிடம் என்று கூறப்படும் இடத்திற்குள் நுழைந்து, ரஷ்யாவை விட்டு வெளியேறும் பாதுகாப்பு காட்சிகளையும் காட்டும் காணொளியினை ரஷ்யாவின் மத்திய பாதுகாப்பு சேவை வெளியிட்டது.