இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது செய்யப்படவுள்ள வலுசக்தி மற்றும் பாதுகாப்பு தொடர்பான உடன்படிக்கைகள் இலங்கைக்கே பாதிப்பாக அமையலாம் என்பதுடன், இறுதியில் இலங்கையின் இருப்பை இந்தியாவிடம் ஒப்படைக்கும் நிலைமையும் உருவாகிவிடலாம் என்றும் தேசிய சுதந்திர முன்னணித் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணி அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர்,
நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யும் போது 1987இல் செய்யப்பட்ட இலங்கை இந்திய உடன்படிக்கையை விடவும் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமான உடன்படிக்கையில் கையெழுத்திடவுள்ளதாகவும், அது பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான உடன்படிக்கை என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேபோன்று மேலோங்கும் சீன இராணுவ பலத்திற்கு முகம்கொடுக்கும் வகையில் இந்த உடன்படிக்கை அமையும் என்றும் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. எவ்வாறாயினும் இந்த தீர்மானம் மிக்க உடன்படிக்கை தொடர்பான தகவல்கள் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை.
அன்று அநுரகுமார தரப்பினரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட, ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இருந்த போது கையெழுத்திட்ட கூட்டு உடன்படிக்கையில் இருந்தபுரிந்துணர்வு உடன்படிக்கையிலேயே தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கையெழுத்திடவுள்ளார். இந்த விடயத்தில் ஜே.வி.பி முன்னர் இருந்த நிலைப்பாட்டில் இருந்து முற்றிலும் மாறியுள்ளது.
வலுச் சக்தி உடன்படிக்கை ஊடாக இலங்கை வலுச்சக்தியில் இந்தியாவை நம்பியிருக்கும் நிலைமை உருவாகும். இறுதியில் இந்தியாவின் இன்னுமொரு மாநிலமாக இலங்கை மாறும் நிலைமையும் ஏற்படலாம். அதேபோன்று பாதுகாப்பு தொடர்பான உடன்படிக்கை மூலம் 1988 கால இலங்கை இந்திய உடன்படிக்கையை விடவும் பெரிய காட்டிக்கொடுப்பாக அமைந்துவிடும்.
இதனால் திருட்டுத்தனமாக செய்துகொள்ளப்படும் இவ்வாறான உடன்படிக்கைகளால் எதிர்கால சந்ததிக்கே பாதிப்பு ஏற்படும். இறுதியில் தவிர்க்க முடியாதவாறு இலங்கையின் இருப்பை இந்தியாவிடம் ஒப்படைக்க நேரிடும். இந்தியாவின் அனுதாபத்தில் இயங்கும் நாடாக இலங்கை மாற்றமடையலாம். அடுத்த பெறுபேறாக சிக்கீனுக்குஏற்பட்டதை போன்று இந்தியாவின் 29ஆவது மாநிலமாக இலங்கை மாற்றமடையலாம்.
அதேபோன்று அடுத்தவரின் யுத்தத்திற்குபலியாகும் நாடாகவும் மாறலாம். இதனால் மக்கள் இதனை புரிந்துகொள்ள வேண்டும் என்றார்