யாழில் இரவோடு இரவாக தமிழ் அரசியல்வாதிகளை சந்தித்த இந்தியா : சீனா தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தகவல்

வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் புதிய இந்தியத் தூதுவர் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பானது யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியொன்றில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் அங்கஜன் இராமநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், எம்.ஏ.சுமந்திரன், சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சி.வி.கே.சிவஞானம், சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட அரசியல் தரப்பினரும், சிவில் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா, நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது போது யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்டுள்ளார். சந்தோஷ் ஜாவின் யாழ்ப்பாண விஜயத்தின் போது, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் துணை தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெய பாஸ்கரன் உள்ளிட்ட இந்தியத் துணைத் தூதரகத்தின் குழுவினரும் உடன் இருந்தனர்.

இந்நிலையில் இந்திய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பு குறித்து கருத்து வெளியிட்ட வட மாகாணா முன்னாள் முதலமைச்சர் சிவி. விக்னேஸ்வரன்,

பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்கு இந்திய அரசாங்கமானது 500ஏக்கர் நிலத்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக வெளியாகிய செய்தி உண்மைக்கு புறம்பானது என இலங்கைக்கான இந்திய தூதுவர் எம்மிடம் கூறினார்.

மேலும், வடக்கின் அபிவிருத்தி மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் எம்மிடம் தெரிவித்தார்.

அத்தோடு இருநாட்டு கடற்றொழிலாளர்கள் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

இதேநேரம் இந்த சந்திப்பு குறித்து கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். எ சுமந்திரன்,

இந்தியாவின் புதிய தூதுவருடன் மேற்கொள்ளப்பட்ட சந்திப்பானது ஆரோக்கியமாக அமைந்தது

இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பை வலுவாக எதிர்ப்பதான கருத்தை இலங்கைக்கான இந்திய தூதுவரிடம் பகிரங்கமாக கூறினோம்.

 இதனடிப்படையில் இந்தியாவுடனான விசேட உறவில் இணக்கப்பாடொன்றை எட்டுவதற்கு தாம் முன்வந்துள்ளதாக சுமந்திரன் தெரிவித்தார்.

இதேநேரம் இந்த சந்திப்பு குறித்த கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரக்குமார் பொன்னம்பலம், இலங்கையை பூகோள அரசியல் ரீதியில் பார்க்காமல் இந்தியாவை போன்று தமிழ் மக்கள் மீதும் கரிசனையுடன் சர்வதேசம் செயற்படவேண்டும் தெரிவித்தார்.

இதன்படி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிடின் இலங்கை அரசியலானது பாரதூரமான விளைவுகளை சந்திக்கக்கூடும் என அவர் குறிப்பிட்;டார்.