கான் யூனிஸில் இருந்து வாபஸ் பெற்ற இஸ்ரேல் படை - ரபாவை தாக்க திட்டம்


தெற்கு காசா மற்றும் அதன் பிரதான நகரான கான் யூனிஸில் இருந்து இஸ்ரேல் தனது துருப்புகளை வாபஸ் பெற்ற நிலையில் காசாவின் தென் கோடியில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் ரபா நகர் மீதான படை நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக அறிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி ஆரம்பமான காசா போருக்கு அரையாண்டுகள் எட்டிய நிலையிலேயே கடந்த ஞாயிறன்று (07) தெற்கு காசாவில் இருந்து இஸ்ரேலிய துருப்புகள் வாபஸ் பெறப்பட்டு பிரதான நகரான கான் யூனிஸ{க்கு மக்கள் திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


எனினும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் விடுத்த அறிவிப்பில், ‘ரபா உட்பட எதிர்கால படை நடவடிக்கைகளுக்கு தயாராவதற்கு பல மாத போருக்குப் பின்னர் கான் யூனிஸ் நகரை விட்டு துருப்புகள் வெளியேறின’ என்று குறிப்பிட்டுள்ளார்.

காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் எகிப்து எல்லையை ஒட்டிய ரபா மீது இஸ்ரேல் திட்டமிட்டிருக்கும் படை நடவடிக்கை குறித்து உலக நாடுகள் கடும் கவலையை வெளியிட்டு வருகின்றன.

‘காசா போர் தொடரும், நாம் அதனை நிறுத்துவதற்கு தொலைதூரத்தில் இருக்கிறோம்’ என்று இஸ்ரேலிய இராணுவத் தளபதி ஹெர்சி ஹல்வி தெரிவித்துள்ளார். ‘இது பல்வேறு தீவிரத்துடனான ஒரு நீண்ட போர்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


பெரும் அழிவுகளுக்கு உள்ளாகி இருக்கும் கான் யூனிஸில் இருந்து துருப்புகள் வெளியேறியதை அடுத்து, இடம்பெயர்ந்த மக்கள் அங்கு வருகைதர ஆரம்பித்துள்ளனர். சற்று தெற்காக இருக்கும் ரபாவில் அடைக்கலம் பெற்ற இந்த மக்கள் தமது வீடுகளுக்கு திரும்பும் நம்பிக்கையை பெற்றுள்ளனர்.

எனினும் அங்கு மரண வாடை வீசுவதாக கான் யூனிஸ{க்குத் திரும்பிய நான்கு குழந்தைகளின் தாயான மாஹா தயிர் குறிப்பிட்டுள்ளார். ‘இனியும் எமக்கு ஒரு நகர் இல்லை… வெறும் இடிபாடுகளே எஞ்சியுள்ளன. எதுவுமே மிஞ்சவில்லை. வீதிகள் வழியாக நடக்கும்போது என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை’ என்று 38 வயதான அந்தத் தாய் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

‘அனைத்து வீதிகளும் தகர்க்கப்பட்டுள்ளன. மக்கள் இடிபாடுகளை தோண்டி உடல்களை எடுப்பதை நான் பார்த்தேன்’ என்று பகுதி அளவு அழிக்கப்பட்டுள்ள தமது வீட்டில் இருந்து தயிர் மேலும் கூறினார்.

படைகளை வாபஸ் பெறுவதாக இஸ்ரேல் அறிவித்த விரைவில் மக்கள் கான் யூனிஸ் நகரில் வெளிப்பட ஆரம்பித்தனர். அவர்கள் தமது இடிந்த வீடுகள் மற்றும் காணாமல் போனவர்கள் தேடி வருகின்றனர்.

ஒக்டோபர் 7 இல் போர் வெடிப்பதற்கு முன் கான் யூனிஸில் சுமார் 400,000 மக்கள் வசித்ததோடு இஸ்ரேலின் கடுமையான குண்டு மழைக்கு மத்தியில் அது தற்போது அழிவடைந்த பூமியாக மாறியுள்ளது. மக்கள் கழுதை வண்டிகள், பைசிகல்கள் மற்றும் டிரக்குகளில் கான் யூனிஸை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளனர்.


இந்நிலையில், போர் இன்னும் முடியவில்லை என்றும் பணயக்கைதிகள் வீடு திரும்பி ஹமாஸ் ஒழிந்த பின்னரே அது முடியும் என்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படையின் பேச்சாளர் லெப்டினன்ட் கேணல் பீட்டர் லேர்னர் பி.பி.சி. செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.

‘படைகள் குறைக்கப்படுகின்றபோதும், மேலும் படை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டி உள்ளது. ரபா தெளிவான கோட்டையாக உள்ளது. நாம் ஹமாஸிடம் உள்ள திறன்களை நீக்க வேண்டி உள்ளது’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.