காசாவின் கான் யூனிஸ் நகரத்தில் இருந்து இஸ்ரேலிய படை வாபஸ்: சடலங்கள் மீட்பு


மத்திய காசாவில் புதிய வெளியேற்ற உத்தரவை பிறப்பித்த இஸ்ரேலியப் படை தெற்கு நகரான கான் யூனிஸில் இருந்து திடீரென்று வாபஸ் பெற்ற நிலையில் இடிபாடுகளுக்கு மத்தியில் பலஸ்தீனர்கள் அங்கு திரும்பியுள்ளனர்.

கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கான் யூனிஸில் இஸ்ரேல் நடத்திய சரமாரித் தாக்குதல்களில் நூற்றுக் கணக்கானோர் கொல்லப்பட்டு இரண்டு இலட்சம் வரையானோர் வெளியேற்றப்பட்ட நிலையிலேயே படையினார் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.


இந்நிலையில் இஸ்ரேல் வாபஸ் பெற்ற பகுதிகளில் இருந்த பல உடல்களை மீட்க முடிந்திருப்பதாக காசா மருத்துவ பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இங்கு தொடர்ந்து 200 பேர் வரை காணாமல்போயிருப்பதாக காசா சிவில் சேவை பிரிவு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் இந்தத் தாக்குதல்களால் கான் யூனிஸின் கிழக்குப் பகுதி மேலும் அழிவுகளை சந்தித்திருக்கும் நிலையில் மக்கள் கால் நடையாக அங்கு திரும்பும் வீடியோ காட்சிகளை அங்குள்ள ஊடகவியலாளர்கள் வெளியிட்டுள்ளனர். கான் யூனிஸில் இருந்து வெளியேறிய இஸ்ரேலியப் படையினர் மத்திய காசாவில் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.

பத்து மாதங்களை நெருங்கும் போரில் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த காசா பகுதியையும் இஸ்ரேலியப் படை கைப்பற்றியபோதும் அண்மைய வாரங்களில் முன்னர் கட்டுப்பாட்டை கொண்டுவந்ததாகக் கூறிய பகுதிகளில் மீண்டும் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதோடு பலஸ்தீன போராளிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மத்திய காசாவின் சிறு நகர் ஒன்றான டெயர் அல் பலாஹ்வில் இருந்து கடந்த திங்கட்கிழமை தொடக்கம் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனர். இங்கிருந்து மக்களை வெளியேற இஸ்ரேல் கடந்த ஞாயிறன்று உத்தரவிட்டிருந்தது.


காசாவின் தென் முனை நகரான ரபா, வடக்கு மற்றும் மத்திய பகுதிகளிலும் நேற்று இஸ்ரேலின் செல் தாக்குதல்கள் இடம்பெறதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.