இஸ்ரேலிய படை மனிதாபிமான வலயத்தில் தாக்குதல் - அதிர்ச்சியில் காஸா மக்கள்

காசாவில் இஸ்ரேலிய துருப்புகள் மற்றும் பலஸ்தீன போராளிகளுக்கு இடையே நேற்றும் (19) மோதல்கள் இடம்பெற்றதோடு இஸ்ரேலின் சரமாரித் தாக்குதல்களும் நீடித்தன.

 ‘மனிதாபிமான வலயம்’ ஒன்றாக அறிவித்திருந்த ரபாவின் அல் மவாசி பகுதியில் உள்ள தற்காலிக கூடாரங்கள் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் ஏழு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று அதிகாலையில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலை அடுத்து அந்தக் கூடாரங்கள் தீப்பற்றி எரிந்ததாக பலஸ்தீன உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.

இதில் உறங்கிக் கொண்டிருந்தவர்களே கொல்லப்பட்டதாக அந்த முகாமில் இருந்த பாத்திமா அல் கிக் என்ற வயது முதிர்ந்த பெண் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

‘பாதுகாப்பான இடம் என்று கருதப்பட்ட பகுதியிலே இஸ்ரேல் எம் மீது செல் குண்டுகளை வீசியது. இங்கு சிறுவர்கள் உறங்கிக்கொண்டிருந்தார்கள்’ என்று அந்தப் பெண் கூறியதாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தவிர தெற்கு காசாவின் கான் யூனிஸ் மற்றும் மத்திய காசாவில் நுஸைரத் அகதி முகாம் மீது இஸ்ரேலியப் படை குண்டு வீசியதாக வபா குறிப்பிட்டது. காசா நகரின் வீடு ஒன்றின் மீது நடத்திய தாக்குதலில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டதாக அல் ஜசீரா குறிப்பிட்டது.

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதல்களில் 24 பேர் கொல்லப்பட்டு மேலும் 71 பேர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.

மீட்பாளர்களால் அடைய முடியாத பகுதிகளில் பாதிக்கப்பட்ட கணிசமானவர்கள் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கி இருப்பதாகவும் அது சுட்டிக்காட்டியது.

கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக காசாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 37,396 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 85,523 பேர் காயமடைந்துள்ளனர்.