இஸ்ரேலிய படை வாபஸ் பெற்ற காசா மருத்துவமனைக்கு தீவைப்பு : பல உடல்கள் மீட்பு



 காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிபா மருத்துவனையில் கடந்த இரண்டு வாரங்களாக நடத்திய முற்றுகையில் இருந்து இஸ்ரேலிய துருப்புகள் வாபஸ் பெற்றுள்ளன.

எனினும் காசாவில் தொடர்ந்து மோதல் நீடிப்பதோடு, நேற்றைய தினத்திலும் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்களில் பலஸ்தீனர்கள் பலர் கொல்லப்பட்டனர்.


அல் ஷிபா மருத்துவ வளாகத்தில் இருந்து இஸ்ரேலிய இராணுவம் நேற்று (01) தனது டாங்கிகள் மற்றும் வாகனங்களை வாபஸ் பெற்றதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்தது. அந்த வளாகத்திற்குள் இருந்து பல இறந்த உடல்களை கண்டெடுத்தாகவும் அந்த அமைச்சு கூறியுள்ளது.

மருத்துவமனையைச் சூழவுள்ள பகுதிகள் மீது வான் மற்றும் செல் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பார்த்தவர்களை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
வாபஸ் பெறும் வாகனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலேயே இஸ்ரேலிய இராணுவம் இந்தத் தாக்குதல்களை நடத்தி இருப்பதாக ஹமாஸ் அரச ஊடக அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.


அல் ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேலிய இராணுவம் கடந்த மார்ச் 18 ஆம் திகதி சுற்றிவளைப்பு நடவடிக்கையை ஆரம்பித்தது. அங்கு ஹமாஸ் போராளிகள் செயற்படுவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியபோதும் ஹமாஸ் அதனை மறுத்தது.

இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையின்போது அல் ஷிபா மருத்துவமனையில் சுமார் 300 பேர் கொல்லப்பட்டதாக காசாவின் சிவில் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் 18 ஆம் திகதி முற்றுகை ஆரம்பித்தது தொடக்கம் மருத்துவமனையில் 21 நோயாளிகள் மரணித்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

 மருத்துவமனைக்கு தீ வைத்து அதனை முற்றாக செயலிழக்கச் செய்து விட்டே இஸ்ரேலிய இராணுவம் அங்கிருந்து வாபஸ் பெற்றிருப்பதாகவும் மருத்துவ வளாகத்திற்குள் மற்றும் சுற்றி இருக்கும் கட்டடங்களில் ஏற்பட்டிருக்கும் சேதம் பாரியளவில் இருப்பதாகவும் காசா சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கட்டடத்திற்கு சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் சில பகுதிகள் தீயினால் சோதமடைந்திருப்பதாகவும் அங்கிருக்கும் ஏ.எப்.பி. செய்தியாளர் விபரித்துள்ளார். 20க்கும் மேற்பட்ட சடலங்களை மீட்டதாக குறிப்பிட்டிருக்கும் மருத்துவர் ஒருவர் சில உடல்கள் வாபஸ் பெறும் வாகனத்தினால் நசுக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்த மருத்துவமனை மீது இஸ்ரேல் படை நடவடிக்கையை ஆரம்பிக்கும் முன்னர் இங்கு ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருந்தனர். அவர்களை தெற்கை நோக்கி வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டிருந்தது.

இந்த மருத்துவமனை வளாகத்தின் மீது இஸ்ரேல் கடந்த நவம்பரிலும் தாக்குதல் நடத்தியபோது சர்வதேச அளவில் கடும் கண்டனத்திற்கு உள்ளானது.

மறுபுறம் மத்திய காசாவில் உள்ள அல் அக்ஸா மருத்துவமனையின் முற்றவெளி பகுதி மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் குறைந்தது நால்வர் கொல்லப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு மற்றும் அந்த மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் பலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் ஆயுதக் குழுவின் கட்டளை மையம் ஒன்றை இலக்கு வைத்தே தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.


ஆறு மாதங்களாக நீடித்து வரும் இஸ்ரேலின் தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 33 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

காசாவில் 20 வயதான நவாட் கொஹன் என்ற படை வீரர் கொல்லப்பட்டதை இஸ்ரேல் இராணுவம் நேற்று உறுதி செய்தது. இதன்படி காசா போர் ஆரம்பித்தது தொடக்கம் கொல்லப்பட்ட இஸ்ரேலிய துருப்புகளின் எண்ணிக்கை 600ஐ எட்டியதாக அது குறிப்பிட்டது. இதில் 256 படையினர் காசாவில் இஸ்ரேல் தரைவழி தாக்குதலை ஆரம்பித்தது தொடக்கம் கொல்லப்பட்டுள்ளனர்.